உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது

Published On 2024-05-25 05:48 GMT   |   Update On 2024-05-25 05:48 GMT
  • கோகுல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சுகமதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி வினோபாஜி நகரை சேர்ந்தவர் கோகுல் (30), ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த சுகமதி (24) என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு சஞ்சனாஸ்ரீ (6), ரிஷ்மிகா (2) என 2 குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து சுகமதி கொடுத்து கொன்று விட்டு அவரும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று சுகமதி வீட்டில் இருந்து வெளியில் வராததை அறிந்த அவரது தந்தை பாபு அங்கு சென்று பார்த்த போது சுகமதி மற்றும் அவரது குழந்தைகள் இறந்து கிடந்தனர்.

இதற்கிடையே அங்கு வந்த தேவூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோகுல் சொந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் வாங்கி உள்ளார். இதற்காக 40 ஆயிரம் ரூபாய் சுகமதியின் தந்தை பாபுவிடம் வாங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மகளிர் சுய உதவிக்குழுவில் கோகுல் தம்பதி கடன் வாங்கினர். அந்த பணத்தை தனது தந்தையிடம் வாங்கிய கடனுக்கு கொடுக்குமாறு சுகமதி கேட்டுள்ளார். ஆனால் அதனை கொடுக்க கோகுல் மறுத்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

பின்னர் கோகுல் கோபித்து கொண்டு அருகில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு சென்று அங்கேயே கடந்த ஒரு மாதமாக தங்கி விட்டார். பின்னர் சுகமதி பல முறை கோகுலிடம் பேச முயன்றும், அவர் போனை எடுக்க வில்லை. மேலும் கோகுல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சுகமதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களால் மனம் உடைந்த சுகமதி வாழ்க்கையில் வெறுப்படைந்து குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து கோகுல் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவிலும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நேற்றிரவு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா ? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சுகமதி மற்றும் அவரது குழந்தைகளின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.

Tags:    

Similar News