தமிழ்நாடு

விடுதியில் தங்கி படித்த 9 வயது சிறுவன் கொலை- சக மாணவன் கைது

Published On 2024-05-25 05:01 GMT   |   Update On 2024-05-25 05:01 GMT
  • சிறுவன் நீண்ட நேரமாகியும் விடுதிக்கு திரும்பாததால் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கத்தப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் தனியார் பவுண்டேசன் சார்பில் அரபி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 13 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று அரபி பள்ளியில் படிக்கும் ஷாநவாஸ் (வயது 9) என்ற சிறுவனுக்கும், அவருடன் படிக்கும் 13 வயது மாணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் அங்கு காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவன் ஷாநவாசை சரமாரியாக குத்தினான்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷாநவாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். பதட்டத்தில் கொலை செய்ததை உணர்ந்த 13 வயதுடைய மாணவன் சிறுவனின் உடலை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயற்சி செய்தான்.

அதன்படிஅருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் ஷாநவாஸ் உடலை போட்டு மறைத்து விட்டு எதுவும் நடக்காததுபோல் மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டான்.

இதற்கிடையில் சிறுவன் ஷாநவாஸ் நீண்ட நேரமாகியும் விடுதிக்கு திரும்பாததால் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் மேலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 13 வயது மாணவனின் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் ஷாநவாசை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டான். சிறுவன் ஷாநவாஸ், தனது தாயை தவறாக பேசியதால் கொலை செய்ததாக அழுது கொண்டே தெரிவித்தான்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் கழிவுநீர் தொட்டியில் கிடந்த ஷாநவாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 9 வயது சிறுவனை சக மாணவன் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News