தமிழ்நாடு

ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்பதா? அண்ணாமலைக்கு சசிகலா கண்டனம்

Published On 2024-05-25 05:08 GMT   |   Update On 2024-05-25 05:08 GMT
  • “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த மக்கள் தலைவர்.
  • பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர்.

சென்னை:

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவை இந்துத்துவா தலைவர் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை புரட்சித்தலைவி அம்மாவை பற்றி தவறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறது. புரட்சித்தலைவி சாதி மத பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய ஒரு மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்.

"மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த மக்கள் தலைவர்.

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி புரட்சித்தலைவி அம்மா தான் என்பது நாடறிந்த உண்மை.

"அம்மா என்றால் அன்பு" என்ற தாய்மைக்கு இலக்கணமாக நம்மோடு வாழ்ந்து மறைந்தவர் அம்மா. புரட்சித்தலைவரை போன்று, புரட்சித்தலைவி அம்மாவும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் அம்மா. அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே சமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News