தமிழ்நாடு

தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதுதான் லட்சியம்- அமைச்சர் ரகுபதி

Published On 2024-05-25 05:42 GMT   |   Update On 2024-05-25 05:42 GMT
  • தமிழ்நாடுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை.
  • இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளா அரசு சிலந்தியாற்றில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எடுக்கவும் மாட்டார்கள்.

போதைப்பொருட்கள் புழக்கத்தை எந்தளவுக்கு தடுத்திருக்கிறோம் என்பதை நாங்கள் எவ்வளவு பிடித்திருக்கிறோம் என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழக முதல்வர் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். இதனால் மாணவர்களின் வாழ்வு கெடும் என்று உணர்ந்தவர் நமது முதல்வர். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தான் எங்களது லட்சியம். ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக பேசுகின்றனர்.

தமிழ்நாடுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை. நாங்கள் இரட்டை நிலைப்பாடு எடுப்பது கிடையாது. என்றைக்கும் ஒரே நிலைப்பாடு தான்.

குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக் கொண்டே தான் இருக்கும், அதுபோல் நமது கெட்ட நேரம் இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது திரும்பவும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும், வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை.

இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags:    

Similar News