செய்திகள்

ஈராக் நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 335 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்

Published On 2017-11-13 11:21 GMT   |   Update On 2017-11-13 11:21 GMT
ஈரான் - ஈராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மணிலா:

ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் சர்ப்போல் -இ- சஹாப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் குவிந்தனர். பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள வளைகுடா நாடுகளில், இஸ்ரேல் வரையிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்கு இடையில் சிக்கித்தவித்த பலரை உயிருடன் மீட்டனர்.

சில இடங்களில் மீட்புப் பணிகள் இன்றும் நடைபெற்றுவரும் நிலையில் நேற்றைய நிலநடுக்கத்தின் விளைவாக இரு நாடுகளிலும் 335 பேர் உயிரிழந்ததாகவும், ஈரான் நாட்டு மலையோரப் பகுதிகளில் மட்டும் சுமார் 1700 பேர் காயம் அடைந்ததாகவும், இருநாடுகளிலும் சுமார் 3 ஆயிரம் பேர் காயம் அடைந்ததாகவும்  ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த இயற்கை சீற்றத்தால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரான் மற்றும் ஈராக் நாடுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட கொடூரமான நிலநடுக்கத்தால் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தாருடைய வேதனையில் எனது நினைவுகளும் இணைந்துள்ளது. காயமடைந்த மக்கள் அனைவரும் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News