செய்திகள்

ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

Published On 2017-10-19 11:34 GMT   |   Update On 2017-10-19 11:34 GMT
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் உள்நாட்டு ராணுவத்தினர் உச்சகட்டப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ‘நேட்டோ’ எனப்படும் பன்னாட்டு படையினரும் போரில் இணைந்துள்ளனர்.

ஆப்கன் நாட்டின் தென்பகுதியான கந்தஹார் மாகாணத்திற்குட்பட்ட மைவான்ட் ராணுவ முகாம் மீது தாலிபன் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என ஆப்கன் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ராணுவத்தின் பதில் தாக்குதலில் 10-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தலிபன் தீவிரவாதிகளின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தீவிரவாத தாக்குதல், ஆப்கனில் பாதுகாப்பான புகலிடமும், ஆதரவும் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு கிடைக்கின்றன என்பதை நிரூபிக்கின்றன என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ஆப்கனின் காந்தகார் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது இன்று, நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. இதுபோன்ற கடின காலங்களில் ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் அரசிற்கு இந்தியா துணைநிற்கும்” என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News