இந்தியா

நான் தீவிர அரசியலில் குதிக்க நாடே விரும்புகிறது- ராபர்ட் வதேரா

Published On 2024-04-27 07:41 GMT   |   Update On 2024-04-27 07:41 GMT
  • சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் 2004 முதல் 2019 தேர்தல் வரை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். இந்த முறை அவர் போட்டியிடவில்லை.
  • அமேதி, ரேபரேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷிகேஷ்:

பாராளுமன்றத்துக்கு நடைபெற உள்ள 7 கட்ட தேர்தலில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

உத்தரபிதேச மாநிலம் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. இங்கு 5-வது கட்டமாக மே 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் மேலிடத்தின் பாரம்பரிய தொகுதியாகும்.

கடந்த முறை ராகுல்காந்தி அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் அவர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு உள்ளார். இதற்கான ஓட்டுப்பதிவு நேற்று முடிவடைந்து விட்டது. அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. அவர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் 2004 முதல் 2019 தேர்தல் வரை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். இந்த முறை அவர் போட்டியிடவில்லை. மேல்சபை எம்.பி.யாக சோனியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அமேதி, ரேபரேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நான் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என நாடே விரும்புகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் இருந்தும் எனக்காக குரல் எழுகிறது. நான் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். நான் 1999 முதல் அமேதி தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறேன். அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் (பா.ஜனதா) மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். பா.ஜனதாவை அகற்ற மக்கள் நினைக்கிறார்கள். ராகுல் மற்றும் பிரியங்காவின் கடின உழைப்பை பார்த்து நாட்டு மக்கள் காந்தி குடும்பத்துடன் இருக்கிறார்கள்.

இவ்வாறு ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.

இந்த மாதம் தொடக்கத்திலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதை மறைமுகமாக தெரிவித்து இருந்தார். தற்போதும் அவர் அதே மனநிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அமேதி தொகுதியில் ராபர்ட் வதேராவுக்கு 'சீட்' கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Tags:    

Similar News