செய்திகள்

ஆப்கானிஸ்தானில் படைகளை அதிகரிக்கும் அமெரிக்காவின் முடிவு பலன் தராது - ரஷிய ஊடகம் தகவல்

Published On 2017-08-22 10:58 GMT   |   Update On 2017-08-22 10:58 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போரிடுவதற்காக படைகளை அதிகரிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டம் பலன் தராது என ரஷிய ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.


மாஸ்கோ:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அந்நாட்டு அரசுக்கிடையே கடந்த 15 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவத்தை அனுப்பி வைத்தது. தற்போது அங்கு சுமார் 8400 அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஆப்கான் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஆப்கானுக்கு மேலும் 4 ஆயிரம் அமெரிக்க துருப்புகளை அனுப்பி வைக்குமாறு டிரம்ப் உத்தரவிட்டார். அவரது இந்த உத்தரவிற்கு ஆப்கானிஸ்தான் பிரதமர், நேட்டோ படை தளபதி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிரான நிலைபாட்டில் ரஷியா இருப்பதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் இந்த முடிவு எந்த ஒரு நல்ல விளைவையும் ஏற்படுத்தும் என்பதை ரஷியாவால் நம்ப முடியவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அந்த ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News