செய்திகள்

பிலிப்பைன்ஸ்: ஒருவார வேட்டையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 80 பேர் கொல்லப்பட்டனர்

Published On 2017-08-18 12:48 GMT   |   Update On 2017-08-18 12:48 GMT
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான வேட்டையில் ஒரே வாரத்தில் 80 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப் பொருள் கடத்தல்கார்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், நாடு முழுவதும் சந்தேகத்துக்குரிய இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்கு கடந்த திங்கட்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

இந்த சோதனையின்போது ஒரே நாளில் 32 கடத்தல்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தலைநகர் மணிலாவில் நேற்றிரவு நடத்தப்பட்ட அதிரடி ரெய்டுகளில் 13 சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இந்த வாரத்தில் இதுவரை  80 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.

மணிலா நகரில் நடைபெற்ற சோதனையில் அப்பாவி மக்களும் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து கைது செய்யப்படுவதாகவும் இங்குள்ள சில அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரிகோ டுட்டர்டே கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் அதிபராக பதவி ஏற்றது முதல் இதுவரையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுமார் 3500 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் தொடர்புடைய 2000 பேரும், விவரிக்க முடியாத சூழ்நிலைகளில் சுமார் 1000 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News