செய்திகள்

சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியை தாக்கிய வழக்கில் தமிழருக்கு 6 மாதம் சிறை

Published On 2017-08-12 20:09 GMT   |   Update On 2017-08-12 20:09 GMT
சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியை தாக்கிய வழக்கில் தமிழருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி இம்ரான் அப்துல் ஹமித் உத்தரவிட்டார்.
சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் வசித்து வருபவர், ராமசாமி சுகுமார் (வயது 59). தமிழரான இவர், அங்கு ஒரு வழிப்பறி வழக்கில் சிக்கினார். அதில் அவருக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 12 கசையடி வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

அந்த தண்டனை முடிந்து வந்த நிலையில் அவர் அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 30-ந் தேதி, அங்கு புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட ஒரு இடத்தில் நின்று, பீர் குடித்துக்கொண்டும், சிகரெட் புகைத்துக்கொண்டும் இருந்தார். இது தொடர்பாக அவரை விசாரணைக்கு வருமாறு தேசிய சுற்றுச்சூழல் முகமை சம்மன் அனுப்பியது.

அதன்படி ஆஜரான அவர் தேசிய சுற்றுச்சூழல் முகமை அதிகாரி குகன் சந்திரசேகரன் என்பவரை தமிழில் ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அடித்து உதைத்தார்.

இதையடுத்து, தாக்குதலுக்கு ஆளான குகன் சந்திரசேகரன், போலீஸ் அதிகாரிகளை உதவிக்கு அழைத்தார்.

அவர்கள் வந்த பிறகும், ராமசாமி சுகுமார் அடங்கவில்லை. மாறாக போலீஸ் அதிகாரி கிறிஸ்டியன் டான் என்பவரை அடித்தார். மேலும், குகன் சந்திரசேகரனை நோக்கி, “உனக்கு என் கையால்தான் சாவு வரப்போகிறது” என்று மிரட்டினார்.

இதையடுத்து அவர் மீது மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, அவர் சார்பில் ஆஜரான வக்கீல் ஹர்ஜித் கவுர், குடிபோதையில் தன் கட்சிக்காரர் அப்படி நடந்து கொண்டதாக கூறி, கருணை காட்டுமாறு வேண்டிக்கொண்டார்.

இதையடுத்து அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி இம்ரான் அப்துல் ஹமித் உத்தரவிட்டார். 
Tags:    

Similar News