செய்திகள்

பாகிஸ்தான்: வேலையை விட மறுத்த பெண்ணின் தலையை துண்டித்த கணவர்

Published On 2017-08-07 10:22 GMT   |   Update On 2017-08-07 10:22 GMT
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வேலையை விட மறுத்த பெண்ணின் தலையை அவரது கணவரே துண்டித்து கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள ஷாம்கே பாட்டியான் பகுதியை சேர்ந்தவர் நஸ்ரின்(37). அவரது கணவர் பெயர் அஃப்ராஹிம். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 

நஸ்ரின், ராய்விந்த் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். அவர் வெளியில் சென்று வேலை பார்ப்பதை பிடிக்காத அவரது கணவர் வேலையை விடுமாறு கூறியுள்ளார். ஆனால் நஸ்ரின் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று நஸ்ரின் தூங்கிய அறை உள்ளபக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவரது குழந்தைகள் பலமுறை முயற்சித்தும் திறக்க முடியாததால் அக்கம்பக்கத்தினரிடம் உதவி கேட்டனர். அக்கம்பக்கத்தினர் பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையின் உள்ளே நஸ்ரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், நஸ்ரினின் கணவர் தான் அவரை கொன்றது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். அவர் வேலைக்கு செல்வது பிடிக்காத கணவர் வீட்டில் அனைவரும் தூங்கிய பின் நஸ்ரின் தூங்கிய அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு, அவரது தலையை துண்டித்து கொன்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News