செய்திகள்

சவுதி அரேபியா: குட்டைப் பாவாடையில் போஸ் கொடுத்த இளம்பெண் கைது

Published On 2017-07-19 13:16 GMT   |   Update On 2017-07-19 13:16 GMT
சவுதி அரேபியாவில் குட்டைப் பாவாடை மற்றும் டீ-சர்ட் அணிந்து வீதியில் வலம்வருவது போன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர்.

ரியாத்:

இணையதளத்தில் வீடியோ மற்றும் போட்டோக்கள் பதிவிடுவதற்காக இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்கள் உள்ளன. இவற்றில் தங்கள் படங்களை பதிவிட்டு ‘லைக்’ பெறுவதில் பலரும் அதிகபடியான ஆர்வம் காட்டி வருகின்றனர். சில வலைதளங்கள் பயனாளிகள் பெறும் ’லைக்’களை பொருத்து அவர்களுக்கு தகுந்த சன்மானமும் வழங்கி வருகிறது. 

இந்த நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத் நகரை சேர்ந்த கலூத் என்ற புனைப்பெயர் உடைய மாடல் பெண் ஒருவர் தனது ஸ்னாப்சாட் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் ஒரு பெண் குட்டைப் பாவாடையும் டீ-சர்ட்டும் அணிந்து சவுதி அரேபியாவின் வீதியில் செல்வது பதிவாகியுள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் பெண்களின் உடை பழக்கங்கள் உட்பட அனைத்து விசயங்களிலும் கடுமையான சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லவும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த வீடியோவில் வரும் பெண் அவற்றை மீறுவது போல் செயல்பட்டுள்ளார். எனவே இந்த வீடியோவிற்கு சவுதி அரேபியாவை சேர்ந்த பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பெண்ணிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வீடியோவில் வலம்வரும் பெண், ரியாத் நகரின் அருகில் உள்ள உஷாய்கேர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் என போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News