செய்திகள்

‘சர்ஜிக்கல்’ தாக்குதல் பற்றி எந்த நாடும் கேள்வி கேட்டதில்லை: அமெரிக்காவில் பிரதமர் மோடி பேச்சு

Published On 2017-06-26 07:16 GMT   |   Update On 2017-06-26 07:16 GMT
பாகிஸ்தான் எல்லைகுள் புகுந்து இந்தியா நடத்திய ‘சர்ஜிக்கல்’ தாக்குதல் குறித்து, உலகில் உள்ள எந்த நாடும் கேள்வி கேட்டதில்லை என்று அமெரிக்காவில் பிரதமர் மோடி கூறினார்.
ஹிஸ்டன்:

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றார்.

வர்ஜினியாவில் அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகின் அமைதியையும், சகஜமான வாழ்க்கையையும் தீவிரவாதம் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு நாம் தீவிரவாதம் பற்றி பேசிய போது நிறைய நாடுகள் அதை ஏதோ சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்றே நினைத்தன. தீவிரவாதத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இப்போதுதான் தீவிரவாதம் என்றால் என்ன என்பதை அவர்களுக்கு புரிய வைத்துள்ளன. தீவிரவாதிகளை அழிக்க இந்தியா கடந்த ஆண்டு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியது.

இந்தியா தன்னை தற்காத்து கொள்ள மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும், தாக்குதல் நடத்தவும் தயங்காது என்பதை அந்த சர்ஜிக்கல் தாக்குதல் சம்பவம் உலகுக்கு நிரூபித்துக்காட்டியது.



தீவிரவாதத்தின் முகத்தை இன்று உலக நாடுகளுக்கு இந்தியா வெற்றிகரமாக காண்பித்துள்ளது. எனவே தீவிரவாதத்துக்கு எதிரான சர்ஜிக்கல் தாக்குதலை உலகில் எந்த நாடும் இந்தியாவிடம் கேள்வி கேட்கவில்லை. அது மட்டுமல்ல சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்தியாவின் வலியையும் உலக நாடுகள் உணர்ந்துள்ளன.

தேவைப்படும் போது, இந்தியா தன்னை பாதுகாத்து கொள்ள இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்தியாவால் அப்போது தனது பலத்தை காட்ட முடியும். அதே சமயத்தில் இந்தியா தனது இலக்கை அடைய ஒரு போதும் சர்வதேச இடையூறுகளை உருவாக்காது. இந்தியாவின் கலாசாரமே அதுதான்.

சர்வதேச விதிகளை இந்தியா எப்போதுமே ஏற்றுக்கொள்ளும். உலகமே கூட்டுக்குடும்பமாக வாழ வேண்டும் என்பதே நமது ஆசை. கூட்டுக்குடும்பம் என்பது நமது கலாசாரம், பண்பாடு.

அதே சமயத்தில் நமது இறையாண்மை, பாதுகாப்பு, அமைதியை காத்து கொள்ளவும் இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும். தேவைப்படும் போதெல்லாம் இந்தியா இதை உறுதியாக செய்யும். யாராலும் அதை தடுக்க முடியாது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதையடுத்து அமெரிக்க தொழில் அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகள், வாய்ப்புகள் பற்றியும் அவர் பட்டியலிட்டார். ரெயில் நிலையங்களில் ஓட்டல்கள் தொடங்குவது, ஜி.எஸ்.டி. வரி மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்கள் பற்றியும் பிரதமர் மோடி பேசினார்.
Tags:    

Similar News