செய்திகள்

அமெரிக்காவில் இரட்டைக் கொலை வழக்கில் இந்தியரின் மரண தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

Published On 2017-04-29 13:37 GMT   |   Update On 2017-04-29 13:37 GMT
அமெரிக்காவில் குழந்தை மற்றும் குழந்தையின் பாட்டியை கொலை செய்த வழக்கில் இந்தியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பென்சில்வேனியா மாநில ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் ரகுநந்தன் என்டமூரி. இந்தியரான இவர் சூதாடும் வழக்கம் கொண்டவர். சூதாடுவதற்கு பெருந்தொகை தேவைப்பட்டதால், ஒரு குழந்தையை கடத்தி அதன் மூலம் பிணையத்தொகையை பறிக்கலாம் என திட்டமிட்டார்.

இதற்காக அவர் கடந்த 2012–ம் ஆண்டு அங்கு பிரஷியா என்ற இடத்தில், தனக்கு தெரிந்த இந்திய தம்பதியரின் குழந்தையான  சான்வி வென்னா என்ற 10 மாத குழந்தையை கடத்த முயற்சித்தார். அப்போது அங்கே அந்த குழந்தையின் பாட்டி சத்யவதி வென்னா (வயது 61) அதைத் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுநந்தன், குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று விட்டார். அத்துடன் குழந்தை கடத்தலை தடுக்க முயன்ற பாட்டி சத்யவதியையும் கத்தியால் குத்திக் கொன்றார்.

இந்த இரட்டை கொலை தொடர்பான வழக்கை விசாரித்த மான்ட்கோமரி கோர்ட், ரகுநந்தனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை எதிர்த்து பென்சில்வேனியா ஐகோர்ட்டில் ரகுநந்தன் மேல்முறையீடு செய்திருந்தார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடும்போது, ரகுநந்தன் சூதாடுவதற்காக குழந்தையை கடத்த முயன்றது சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்தனர். குற்றத்தை ஒப்புக்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாக ரகுநந்தன் தெரிவித்தார். ஆனால் அவரது வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.

இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், ரகுநந்தன் மீதான மரண தண்டனையை உறுதி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News