தமிழ்நாடு

இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Published On 2024-05-01 01:33 GMT   |   Update On 2024-05-01 06:29 GMT
  • சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதின.
  • இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சத்தியமங்கலம்:

கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பம், குடும்பமாக சுற்றுலா தலம் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அவ்வாறு குடும்பத்துடன் செல்லும்போது சில சமயங்களில் விபத்தில் சிக்கி உயிரிழப்பும் ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இதேபோன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், நெசவாளர் காலனி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோர விபத்து குறித்த விவரம் வருமாறு:

கரூர் மாவட்டத்திலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் சிறுமுகை ஜடையம்பாளையத்தைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி ரஞ்சிதா, அவர்களது மகன் அபிஷேக் (8), மகள் நித்திஷா (7) ஆகியோர் சென்றனர். முருகன் கரூரில் ஏற்றுமதி தொழில் செய்துவந்தார். காரை முருகன் ஓட்டிவர மனைவி, மகன், மகள் உடன் வந்து கொண்டிருந்தனர்.

இதேபோல் பவானிசாகருக்கு சுற்றுலா வந்த சேலத்தைச் சேர்ந்த மோகன், சுஜித் விஷால், பத்ரி ஆகிய 3 பேர் பவானிசாகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு மீண்டும் சேலம் நோக்கி தங்களது சொகுசு காரில் வந்து கொண்டிருந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் நெசவாளர் காலனி அருகே 2 கார்களும் வந்தபோது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் 2 கார்களும் தலைகீழாக கவிழ்ந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் மோகன் ஓட்டி வந்த மாருதி 800 கார் பலத்த சேதமடைந்து அப்பளம் போல் நொறுங்கியது.

விபத்தில் பலத்த அடிபட்ட முருகன், அவரது மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக், மகள் நித்திஷா ஆகியோர் உயிருக்கு போராடி துடித்தனர். விபத்து நடந்ததும் அந்த பகுதியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து விபத்து குறித்து 108 ஆம்புலன்சுக்கும், பவா னிசாகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு வந்தனர். அப்போது விபத்தில் முருகன் அவரது மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. மகள் நித்திஷா வயிற்றில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார்.

அதேசமயம் எதிர் தர ப்பில் இருந்து காரில் வந்த மோகன், சுஜித் விஷால், பத்ரி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்தில் உயிரிழந்த முருகன், அவரது மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் உயிருக்கு போராடிய மகள் நித்திஷாவை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர் நித்திஷா வரும் வழியிலேயே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணி க்கை 4 ஆக உயர்ந்தது. விபத்தில் காயம் அடைந்த மோகன், சுஜித் விஷால், பத்ரி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் நடந்த இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News