செய்திகள்
அடுத்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்று பெரியகுளத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ். என சுவரொட்டி- அ.தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பு

Published On 2020-08-16 07:28 GMT   |   Update On 2020-08-16 07:28 GMT
‘தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்’ என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தேனி மாவட்டம் முழுவதும் சுவரொட்டி ஒட்டியதால் அ.தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தேனி:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021) சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்பது குறித்து சில அமைச்சர்களிடையே சமீபத்தில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அடிக்கடி அமைச்சர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில், போடி, கம்பம், கூடலூர், தேனி, பெரியகுளம் உள்பட தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சிலர் பரபரப்பான வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர்.

போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெஞ்சம்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் என ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சுவரொட்டிகளில், ‘தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்.’, ‘ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ்.’, ‘2021-ல் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்.’, ‘ஏழை எளியோரின் எளிய முதல்வர் ஓ.பி.எஸ்.’, ‘என்றென்றும் மக்களின் முதல்வர் ஓ.பி.எஸ்.’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த சுவரொட்டிகள், பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு அமைந்துள்ள தெருவில் உள்ள சுவர்களிலும் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று இந்த சுவரொட்டிகள் திடீரென கிழிக்கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவுரையின் பேரில் சுவரொட்டிகள் அகற்றப்பட்டதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். அதேநேரத்தில் இந்த சுவரொட்டியால் அ.தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News