செய்திகள்
வைகோ

கொரோனா பரிசோதனை செய்ய டாக்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்- வைகோ

Published On 2020-04-27 07:52 GMT   |   Update On 2020-04-27 07:52 GMT
உலக சுகாதார நிறுவன அறிவுரைப்படி கொரோனா பரிசோதனை செய்ய டாக்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு வீரியம் குறையாமல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம்தான் சமூக பரவல் குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியும். நேற்று வரை 79,586 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிவகைகளை அரசு ஆராய வேண்டும்.

கொரோனா பரிசோதனைக்கு தொண்டை மற்றும் மூக்கிலிருந்து மாதிரிகள் எடுப்பதற்கு இ.என்.டி. மருத்துவர்களையும், மருத்துவ மேற்படிப்புப் பயிற்சி மருத்துவர்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் விதிமுறைகளை வகுத்துள்ளன.

ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விதிமுறைகளை மீறி ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்கள் மாதிரிகளை எடுப்பதற்கு வற்புறுத்தப்படுவதாக தெரிய வருகிறது.

பட்டயப்படிப்பு மட்டுமே முடித்துள்ள ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்கள், மாதிரிகளை பரிசோதனை செய்து, முடிவுகளை அளிக்கும் பணியை மட்டுமே மேற்கொள்ள முடியும். கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உரிய பாதுகாப்பு உடைகளுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்களை கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க நிர்பந்திக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News