செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வனத்துறை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

Published On 2019-09-04 05:26 GMT   |   Update On 2019-09-04 05:26 GMT
காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கன்னிவாடி:

கே.சி.பட்டி, ஆடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை உடைத்து தோட்டங்களில் உள்ள வீடுகள், செட்டுகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த காப்பி, வாழை பயிர்களை சேதப்படுத்தியது.

அந்த யானைகள் வெளியேறாமல் அங்கேயே முகாமிட்டு உயிர்ப்பலி ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே விவசாயிகளின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் அலட்சியம் செய்து புறக்கணிப்பதை, வன்மையாக கண்டித்தும், காட்டு யானைகளின் அட்டகாசத்திற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் ஆடலூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் பெரும்பாறை, ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, கே.சி.பட்டி, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பாச்சலூர், பெரியூர், நடுப்பட்டி, குப்பமாள்பட்டி, நல்லூர் காடு, பள்ளத்துக்கால்வாய், சேம்படிஊத்து உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவ்வழியே சென்ற 3 அரசு பஸ்களையும் சிறை பிடித்து காட்டு யானைகள் நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் நவநீத கிருஷ்ணன், கொடைக்கானல் வனப்பாதுகாவலர் சக்திவேல், கன்னிவாடி ரேஞ்சர் ரவிச்சந்திரன், வி.ஏ.ஓ. அருண்பாண்டியன், தருமத்துப்பட்டி வருவாய் கோட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வாழை சாகுபடியை பெரிதும் நம்பியுள்ள விவசாயிகளுக்கு காட்டு யானைகள் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர் என தெரிவித்தனர்.

எனவே யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அதிகாலையில் வேலைக்கு சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News