உள்ளூர் செய்திகள்

வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்து கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய திமுக கவுன்சிலர் கைது

Published On 2024-04-26 08:23 GMT   |   Update On 2024-04-27 03:47 GMT
  • வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
  • தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி இன்று கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள முகையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 40). இவர் தி.மு.க. மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். அதே கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக சாந்தி பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆ.கூடலூர் மற்றும் ஆயந்தூர் ஆகிய இரு கிராமங்களுக்கு ஆயந்தூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் முடிந்த பிறகு வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இரவு உணவை அருகில் உள்ள உணவகத்தில் இருந்து வி.ஏ.ஓ. சாந்தி வாங்கி வந்தார்.

தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ் காந்தியும் அதே கடையில் உணவு வாங்கினார். அப்போது ராஜீவ் காந்திக்கு கட்டி வைத்த உணவை கிராம நிர்வாக அலுவலர் சாந்தி எடுத்துக் கொண்டு வந்தாக கூறி, வாக்கு சாவடி மையத்திற்கு சென்ற தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி, அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தியினை சரமாரியாக தாக்கினார். இதைக்கண்ட சக ஊழியர்கள், தி.மு.க. கவுன்சிலரை தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காணை போலீஸ் நிலையத்தில் தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ் காந்தி, தன்னை அவதூறாக பேசி தாக்கி, மானபங்கம் செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் சாந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜீவ்காந்தியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி இன்று கைது செய்யப்பட்டார். ராஜீவ்காந்தியை கைது செய்யக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகாரளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News