யானைகளால் சேதம் அடைந்துள்ள தென்னை, வாழை மரங்களை காணலாம்.
விவசாய தோட்டத்தில் புகுந்து வாழை-தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
- விவசாயிகள் ஒருங்கிணைந்து யானை கூட்டத்தை விரட்டினர்.
- உடனடியாக நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கூட்டம் கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. குறிப்பாக தென்னை வாழை மரங்களை தின்றும் மிதித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏற்கனவே நஷ்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவும் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள் கூட்டம் அங்குள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து வாழைத் தென்னை மரங்களை மீண்டும் சேதப்படுத்தி உள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி அடுத்த சேஷன்நகர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் தனது விவசாய நிலத்தில் நூற்றுக்கணக்கில் தென்னை-வாழைகளை பயிரிட்டுள்ளார். அவைகள் நன்கு வளர்ந்து இருந்தது. வனப்பகுதியையொட்டி விளைநிலம் இருப்பதால் இரவு நேரத்தில் விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானைக்கூட்டம், விவசாயி விஜயகுமார் நிலத்தில் கம்பி வேலிகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் தென்னை மரங்களை தின்றும், மிதித்தும் சேதம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளன. பின்னர் விவசாயிகள் ஒருங்கிணைந்து யானை கூட்டத்தை விரட்டினர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது,
கடந்த ஒரு வாரமாக யானை கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி எங்கள் கிராமத்துக்குள் புகுந்து தொடர்ந்து தென்னை வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன. மேலும் மக்காச்சோள பயிர்கள் காய்கறிகளையும் சேதப்படுத்தி உள்ளன.
கிட்டத்தட்ட இந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தென்னை-வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் எங்கள் பகுதி விவசாயிகள் படும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
உடனடியாக நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்கள் நீண்ட நாட்களாகவே அண்டை மாநிலமான கர்நாடகாவை போன்று யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராதவாறு ரயில்வே தண்டவாள இரும்பு கம்பி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.