செய்திகள்

பா.ஜ.க.வின் பேச்சை கேட்டு செயல்படும் தேர்தல் ஆணையம்- தங்க தமிழ்ச்செல்வன்

Published On 2019-01-08 05:10 GMT   |   Update On 2019-01-08 05:10 GMT
பா.ஜ.க.வின் பேச்சை கேட்டுதான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #AMMK #ThangaTamilselvan #BJP #ElectionCommission
கம்பம்:

தேனி மாவட்டம் கம்பத்தில் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூரில் பிப்ரவரி 7-ந் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்துவோம் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் அறிவித்தது. ஆனால் தற்போது தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லை என தலைமைச்செயலாளர் மற்றும் கலெக்டர் கூறியதாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்து தேர்தலை ரத்து செய்துள்ளனர்.

தேர்தல் அறிவித்தாலும் மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்தது. எம்.எல்.ஏ. இல்லாததால் அந்த தொகுதியில் எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

தற்போதைய கள நிலவரப்படி அ.தி.மு.க. தோல்வி அடையும். அ.ம.மு.க. வெற்றி பெறும் என்ற காரணத்தால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். ஆனால் தோல்வி பயம் காரணமாகவே அனைத்து கட்சிகளும் தேர்தலை ரத்து செய்ய உதவி உள்ளன.

ஜெயலலிதா பொங்கல் பரிசாக ரூ.100 தான் வழங்கினார். ஆனால் எடப்பாடி அரசு ரூ.1000 வழங்குகின்றனர். அப்படியானால் ஜெயலலிதாவின் ஆட்சியை மிஞ்சும் அளவுக்கு ஆட்சி நடத்துகிறார்களா? ஒரு தலைமைச் செயலாளரே முன்னுக்கு பின் முரணாக பேசினால் அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் அவ்வாறு செய்யாது. ஏனெனில் பா.ஜ.க.வின் பேச்சை கேட்டுதான் தேர்தல் ஆணையமே செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #AMMK #ThangaTamilselvan #BJP #ElectionCommission
Tags:    

Similar News