செய்திகள்

முகப்பேரில் புத்தாண்டு தினத்தில் மோதல்- தந்தையை அடித்து கொன்ற மகன்

Published On 2019-01-01 08:13 GMT   |   Update On 2019-01-01 08:13 GMT
புத்தாண்டை கொண்டாடி விட்டு தாமதமாக வந்ததை தட்டிக்கேட்ட தந்தையை மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #NewYearCelebration
அம்பத்தூர்:

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் நவீன்குமார் (19).

நேற்று இரவு நண்பர்களோடு புத்தாண்டு கொண்டாடுவதற்காக நவீன் குமார் வெளியில் புறப்பட்டார். வெங்கடேசன் மகனை தடுத்துள்ளார். புத்தாண்டு கொண்டாடுவதற்கு வெளியில் செல்ல வேண்டாம் என்று அவர் நவீன் குமாரிடம் கூறியுள்ளார்.

ஆனால் தந்தையின் பேச்சை கேட்காமல் புத்தாண்டை கொண்டாடுவதற்காக வெளியில் சென்ற நவீன் நள்ளிரவு 1½மணி அளவில் வீட்டுக்கு வந்தார்.

வீட்டு கதவை திறந்துவிட்ட தாய் கண்ணகி,‘‘ஏண்டா இவ்வளவு நேரம்’’ என்று கேட்டார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த தந்தை வெங்கடேசும் வந்து மகன் நவீன்குமாரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது.

இதனால் ஆத்திரம் அடைந்த நவீன்குமார் வெங்கடேசனை தந்தை என்றும் பாராமல் சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் விட்டு சுவற்றிலும் இரும்பு கதவிலும் விழுந்த வெங்கடேசனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வெங்கடேசனை தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் நொளம்பூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தந்தையை கொலை செய்த நவீன்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புத்தாண்டை கொண்டாடி விட்டு தாமதமாக வந்ததை தட்டிக்கேட்ட தந்தையை மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெங்கடேசனின் சொந்த ஊர் ஆரணி ஆகும். அவர் உயிரிழந்ததும் போலீசுக்கு தெரியாமல் ஆரணிக்கு உடலை கொண்டு செல்ல உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர். வீட்டிலேயே உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்தனர். பின்னர் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்சையும் வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பு சான்றிதழை கேட்டார்.

இதன் பிறகுதான் வெங்கடேசன் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசுக்கு தெரிய வந்தது. அவர்கள் சென்று உடலை கைப்பற்றினர். #NewYearCelebration
Tags:    

Similar News