செய்திகள்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிவாரண உதவி வழங்கிய போது எடுத்த படம்.

புயலால் பாதித்த விவசாயிகளுக்கு 1 லட்சம் தென்னங்கன்றுகள்- பிரேமலதா

Published On 2018-11-29 04:27 GMT   |   Update On 2018-11-29 04:27 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க உள்ளதாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #GajaCyclone #DMDK #PremalathaVijayakanth
பட்டுக்கோட்டை:

தஞ்சாவூர் மாவட்டத்தில் துறவிக்காடு, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட் பகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞர் அணிச் செயலாளர் சுதீஷ் மற்றும் விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் 1000 நபர்களுக்கு நிவாரண பொருள்களை நேற்று மாலை வழங்கினார்.

துறவிக்காட்டில் நிவாரணப் பொருள்களை வழங்கிய பிறகு பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சேதமடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரமே முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்வதுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்து தரவேண்டும்.

தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவி என்பது இதுவரை எந்த ஒரு மக்களுக்கும் வந்து சேரவில்லை. புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களை மத்திய அரசு பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து, தமிழக அரசுக்கு உரிய நிவாரணத்தை வழங்கவேண்டும். அதற்கு முன்னதாக, தமிழக அரசு அறிவித்த ரூ.1000 கோடி முதல் கட்ட நிவாரண உதவியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இதுவரை மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை தொண்டு நிறுவனங்கள்தான் உதவிகள் செய்து வருகின்றன. தே.மு.தி.க. சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை 4 மாவட்டங்களிலும் வழங்கி வருகிறோம்.

அடுத்தகட்டமாக 1 லட்சம் தென்னங்கன்றுகளை வாங்கி நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். இதற்காக அரசு மானிய விலையில் தரமான தென்னங்கன்றுகளை வழங்கவேண்டும். மேலும் தென்னைக்கு அரசு அறிவித்த நிவாரணத்தொகை என்பது விழுந்த மரத்தை அகற்றவே போதாது. எனவே குறைந்தபட்சமாக ஒரு தென்னைக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார். #GajaCyclone #DMDK #PremalathaVijayakanth

Tags:    

Similar News