செய்திகள்

மகிழ்ச்சி திருநாளை பயந்து கொண்டாட வைப்பதா?- தமிழிசை கண்டனம்

Published On 2018-11-04 06:25 GMT   |   Update On 2018-11-04 06:25 GMT
தீபாவளியை பயந்து பயந்து கொண்டாட வேண்டிய சூழ்நிலையை உருவாக்க கூடாது என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan
சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இந்தியாவில் வளர்ந்து வரும் அரசியல் நட்சத்திரம் என்ற விருதை அமெரிக்க நிறுவனம் வழங்கியது. விருது பெற்றுவிட்டு டாக்டர் தமிழிசை நேற்று இரவு சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பளித்தனர். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர்.

கட்சி நிர்வாகிகள் நரேந்திரன், எம்.என்.ராஜா, வினொஜ் செல்வம், தாமரை மணிகண்டன், காளிதாஸ், வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் தங்கமணி, முத்துக்கண்ணன், ஜெய் சங்கர், தனஞ்செயன், கிருஷ்ணகுமார், மோகன ராஜா, பாஸ்கர், தசரதன் உள்பட பலர் சால்வைகள், மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.

விவேகானந்தரின் மண்ணில் இருந்து அவருக்கு பெருமை சேர்த்த மண்ணில் சென்று விருது பெற்றது மகிழ்ச்சி. இந்த விருதை பா.ஜனதா தொண்டர்களுக்கும், தமிழர்களுக்கும் சமர்பிக்கிறேன். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நான் இல்லை.

அமெரிக்காவில் நம் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நேர்மறையான அரசியலை அவர்கள் விரும்புகிறார்கள். உலக அளவில் இந்தியாவின் கவுரவம் உயர்ந்து வருகிறது.

ஒலியும், ஒளியும் சேர்ந்தது தான் தீபாவளி பண்டிகை. இதில் ஒலிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொழிலையும், மகிழ்ச்சியையும் பாதிக்கும். பண்டிகையை பண்டிகையாக கொண்டாட விட வேண்டும். தண்டனை விழாவாக்க கூடாது. வேண்டிய தீபாவளியை பயந்து பயந்து கொண்டாட வேண்டிய சூழ்நிலையை உருவாக்க கூடாது.

ஏற்கனவே கோர்ட்டு தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் மத்தியில் கூடுதல் நேரம் பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில் என்று பீதியை ஏற்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan
Tags:    

Similar News