செய்திகள்

மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்- அன்புமணி பேச்சு

Published On 2018-10-13 11:52 GMT   |   Update On 2018-10-13 11:52 GMT
மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சேலத்தில் நடந்த மாணவ, மாணவிகளுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசினார். #anbumani #pmk

சேலம்:

சேலத்தில் இன்று நடந்த மாணவ, மாணவிகளுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துரையாடி பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, டாஸ்மாக் கடைகள் வேண்டும் என்று விரும்புபவர்கள் கை தூக்குங்கள் என்றார். ஆனால் யாரும் கையை தூக்க வில்லை.

மதுவினால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. இதில் மூளை, இதயம், கல்லீரல் போன்ற பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. முன்பெல்லாம் 40-வயதுக்கு மேல்உள்ளவர்கள் தான் மது குடித்தார்கள், தற்போது 13 வயதிலே மது குடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதனால் சாலை விபத்து அதிக அளவில் நடக்கிறது. இந்த விபத்தில் 25-வயதுக்குட்பட்டவர்கள் இறந்து விடுகிறார்கள். இதனால் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். மனநலம் நோய் காப்பகம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.

மதுக்கடைகளை மூட தமிழக அரசு மறுக்கிறது. காரணம் அதில் தான் வருமானம் அதிகம் வருகிறது. ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி கிடைக்கிறது.

மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். கண்டிப்பாக எங்களால் கொண்டு வர முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கையெழுத்து போட்டு மதுவை முழுமையாக ஒழிப்போம். இதனால் சிலர் சாராயம் அதிகமாகும் என்று கூறுவார்கள். அதனை கட்டுப்படுத்த இலவச போன் நம்பர் ஒன்று கொடுப்போம், அந்த நம்பருக்கு தகவல் கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு கொடுப்போம். மீறி சாராயம் விற்கப்பட்டால் அந்த பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும், உயர் அதிகாரிகள் மீது கரும்புள்ளி வைக்கப்படும், இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது. மது இல்லாத தமிழகமாக மாற்றுவோம்.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு 36 ஆயிரம் கோடி லாபம் வந்தாலும் தனி நபருக்கு இழப்பு ஆண்டுக்கு ஒரு லட்சம் ஏற்படுகிறது. மது போதையால் விபத்து, வேலைக்கு செல்லாதது உள்பட பல்வேறு காரணங்களால் இந்த இழப்பு ஏற்படுகிறது.

விவசாய பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம், மழை நீரை சேமித்து கூடுதல் மகசூல் பெற வழி ஏற்படுத்தலாம். குறைந்த மழை பெய்யும் மேலை நாடுகளில் கூட தண்ணீரை சேமித்து அதிக அளவு விவசாயம் செய்யப்பட்டு விவசாயிகள் லாபம் சம்பதிக்கிறார்கள். ஆனால் நீர் மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு சரியாக கையாளாமல் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

தமிழகத்திற்கு மொத்தம் 7 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதற்கு ஆண்டுக்கு 62 ஆயிரம் கோடி வட்டி செலுத்துகிறார்கள். இந்த தொகை மூலம் தினமும் ஒரு மெடிக்கல் கல்லூரியை கட்ட முடியும், பல லட்சம் வேலை வாய்ப்புகளையும் புதிய தொழிற்சாலைகளையும் தொடங்க முடியும் என்றார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். #anbumani #pmk

Tags:    

Similar News