செய்திகள்

எந்த தேர்வு கொண்டு வந்தாலும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-04-19 10:25 GMT   |   Update On 2018-04-19 10:41 GMT
மத்திய அரசு எந்த தேர்வு கொண்டு வந்தாலும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர்:

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.1 கோடியே 61 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நகராட்சி பள்ளி கட்டிட திறப்பு விழா மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் பா.பெஞ்சமின், மாபா.க. பாண்டியராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 6-ம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும். கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றார்கள்.

தற்போது பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து திறம்பட ஆசிரியர்கள் நீட் தேர்வு குறித்த மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து வருகிறார்கள். இதன் மூலம் இந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வார்கள். தமிழக மாணவர்கள் வரும் நீட் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் 3118 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

மத்திய அரசு எந்த தேர்வு கொண்டு வந்தாலும் தமிழக மாணவர்கள் அதனை திறம் பட எதிர்கொள்ளும் விதமாக கல்வியில் மாற்றம் கொண்டு வரப்படும். மேலும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் சீருடை போன்று அரசு பள்ளி மாணவர்கள் சீருடை மாற்றம் வரும். முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் இந்த ஆண்டு கல்விக்காக ரூ.27.250 கோடி ஒதுக்கியுள்ளனர், அம்மாவின் அரசு மாணவர்களின் பொற்கால அரசு என்பதை இந்த அரசு நிச்சயம் காப்பாற்றும்.

மேலும் 9.10.11.12ம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய தளம் என்ற புதிய பாடத்திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கான கல்வி தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News