செய்திகள்
விபத்தில் சிக்கிய வாகனங்கள்.

சூலூர் அருகே மினி டெம்போ மீது மணல் லாரி கவிழ்ந்து விபத்து- 2 தொழிலாளர்கள் பலி

Published On 2018-03-19 08:08 GMT   |   Update On 2018-03-19 08:08 GMT
சூலூர் அருகே இன்று காலை மினி டெம்போ மீது மணல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 தொழிலாளர்கள் மூச்சு திணறி பலியானார்கள்.
சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் இருந்து சமையல் பாத்திரங்களை ஏற்றி கொண்டு ஒரு டெம்போ வந்தது. இன்று காலை 7 மணியளவில் இந்த டெம்போ கோவை- திருச்சி சாலையில் ரெங்கநாதபுரத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே எம்சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி வந்தது. திடீரென லாரியும், டெம்போவும் நேருக்கு நேர் மோதியது.

லாரி மோதியதில் டெம்போ நொறுங்கியது. அதன் மேல் லாரி கவிழ்ந்தது. அதில் இருந்து மணல் கொட்டியது. இதில் டெம்போவில் வந்த 3 பேர் சிக்கி கொண்டனர்.

அவர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பொக்லைன் எந்திரம் வரவைழக்கப்பட்டு மணலில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.

சுமார் ஒன்றரை மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் தான் மணலை அப்புறப்படுத்த முடிந்தது. அதற்குள் மணலில் சிக்கி மூச்சு திணறி வெள்ளையன் (35), கார்த்தி (25) ஆகியோர் பலியாகி விட்டனர்.

பெனிட் என்பவர் காயத்துடன் மீட்கப்பட்டார். அவர் சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்தில் பலியானவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து காரணமாக கோவை- திருச்சி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாரி கவிழ்ந்ததும் அதன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சூலூர் ரெகுநாதபுரம் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதற்கு காரணம் ரோடு குறுகலாக இருப்பதும், வளைவு இருப்பதும் தான் என தெரிவித்து உள்ளனர். எனவே குறுகலான சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #Tamilnews
Tags:    

Similar News