செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுக்கிறது- சீமான் குற்றச்சாட்டு

Published On 2018-03-15 10:15 GMT   |   Update On 2018-03-15 10:15 GMT
மத்திய அரசு கர்நாடக தேர்தலை முன்னிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார். #seeman

அவனியாபுரம்:

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழக எம்.பி.க்.கள் டெல்லியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடி வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசு கர்நாடக தேர்தலை முன்னிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது. தமிழக அரசு சொல்லி பார்த்தும், அனைத்துக்கட்சியினர் கூறியும் அவமதிப்பு செய்கிறது

குரங்கணி காட்டுத்தீ விபத்தில், பேரிடர் மேலாண்மை செயல்படவில்லை. புயல் வெள்ளம் போன்ற சூழலில் மெத்தனமாக செயல்படும் அரசு, தீயை அணைக்க என்ன நடவடிக்கை எடுத்தது?

மணல், மற்றும் தண்ணீர், ரசாயனம் கொண்டு ஏன் தீயை அணைக்கவில்லை? டிரக்கிங் சென்றவர்கள் யாரிடம் முன் அனுமதி பெறவில்லை என்று கூறும் அரசு, மலைப்பாதையில் ஏன் சோதனைச்சாவடியை வைத்துள்ளது?

ஒரு மத்திய அமைச்சரின் மகன், மகள் காட்டுத்தீ விபத்தில் சிக்கி இருந்தால் இரவு நேரம் மீட்பு பணியில் ஈடுபட முடியாது என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறுவாரா?

சீனா, பாகிஸ்தான் சண்டை போட்டால் இரவு நேரம் போருக்கு தயார் இல்லை என கூறுவாரா?

ஒகி, தானே புயல் போன்ற சூழ்நிலையில் மெத்தனமாக உள்ள அரசு, அணுஉலை பாதுகாப்பானது என சொல்வது வேடிக்கையாக உள்ளது.

டி.டி.வி. தினகரன் மதுரையில் கட்சி தொடங்க வில்லை. மேலூரில் தான் தொடங்குகிறார். நல்லது நடக்கட்டும். பார்க்கலாம்.

இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது கசாப்பு கடைக்கு ஆட்டை அனுப்புவது மாதிரி.

இலங்கை ராணுவத்தில் சிங்களர்கள் மட்டும் உள்ளனர், தமிழர்கள் அங்கு வாழ முடியாத சூழ்நிலை உள்ளது.

சிறுபான்மையினர் என்று தமிழரை அழித்த இலங்கை தற்போது முஸ்லிம் தமிழர்களை தாக்குகிறது. இலங்கை ஜனநாயக நாடு அல்ல. பவுத்த மத தீவிரவாத நாடு.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #seeman

Tags:    

Similar News