செய்திகள்

குரங்கணி உயிர்ப்பலி எதிரொலி: தமிழகம் முழுவதும் மலை ஏற்ற பயிற்சிக்கு திடீர் தடை- அமைச்சர்

Published On 2018-03-15 05:09 GMT   |   Update On 2018-03-15 05:09 GMT
தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் மலையேற்ற பயிற்சிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.

போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 12 பேர் காட்டுத் தியில் சிக்கி உயிரிழந்தனர். வனத்துறையினரிடம் அனுமதி பெற்று சென்றதாக அவர்கள் கூறி வரும் நிலையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் மலையேற்ற பயிற்சிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், குரங்கணி தீ விபத்தில் தொடர்புடைய வனவர் ஜெயசிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி வாங்கிய இடத்துக்கு செல்லாமல் சிலர் வேறு இடங்களுக்கு சென்றதாக தெரிய வந்துள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.

குரங்கணி என்பது மலைக்கு கீழ் உள்ள ஒரு ஊர். அந்த ஊருடன் பஸ் நிறுத்தப்பட்டுவிடும். அதற்கு மேல் மலைப்பகுதி தொடங்குகிறது. மலை முழுவதும் தேயிலை தோட்டம் உள்ளது. அதன் பிறகு கேரள எல்லை தொடங்கும். அனைவரும் படித்து முடித்து மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்.

எந்த பகுதியில் தொடங்கி எந்த பகுதியில் முடிக்க வேண்டும் என்ற உண்மை தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொண்டனர். குறைவான ஆண்கள் மட்டுமே இக்குழுவில் சென்றுள்ளனர். அதிக அளவில் பெண்கள்தான் சென்றுள்ளனர். அதிலும் குறைந்த வயதுடைய இளம் பெண்கள் சென்றுள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கூட எங்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கெஞ்சி கூறினார்கள்.

ஏனெனில் வீட்டுக்கு தெரியாமல் டிரெக்கிங் வந்ததால் பிரச்சினை ஏற்பட்டு விடும் என்று பயந்தனர். அந்த அளவுக்கு மலையேற்ற பயிற்சிக்கு மூளைச் சலவை செய்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஜாலியாக ஊர் சுற்றிப் பார்க்கலாம் என நினைத்து விபரீதமான செயலில் ஈடுபடுகிறார்கள். குரங்கணி பகுதி மக்களே இது குறித்து கதை கதையாக சொல்கின்றனர். வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் என்றால் வெளி நாட்டினருக்கு ஈடாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூட்டம் கூட்டமாக வருவதாகவும், அதிலும் பலர் குடிபோதையில் செல்வதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அவ்வாறு செல்லும் போது சிகரெட் பற்ற வைத்து வனத்தில் வீசி விட்டால் அது தங்களையும், வனத்தையும் அழித்து விடும் என்ற ஆபத்தை உணராமல் செயல்படுகிறார்கள்.

எனவே இது குறித்து முறையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News