செய்திகள்

2009-ல் ஐகோர்ட்டு வளாகத்தில் நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் போராட்டம்

Published On 2018-02-19 11:32 GMT   |   Update On 2018-02-19 11:32 GMT
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் 2009-ல் போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொடூரமான முறையில் கொன்று குவிக்கப்பட்டனர். இதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த போராட்டம், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீவிரமானது. அப்போது சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ஐகோர்ட்டிற்கு 2009-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி வந்திருந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள், அவரை கண்டதும் கடும் கோபமடைந்தனர்.

நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.சந்துரு ஆகியோருடன் கோர்ட்டில் அமர்ந்திருந்த சுப்பிரமணியசாமி மீது சிலர் முட்டை வீசி தாக்குதல் நடத்தினர். நீதிபதிகள் முன்பு நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இதுகுறித்து ஐகோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து வக்கீல்கள் சிலரை 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி கைது செய்ய முற்பட்டபோது, மோதல் ஏற்பட்டது.

வக்கீல்களும், போலீசாரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் கற்கள், செருப்பு உள்ளிட்டவைகளை வீசினர். இதை தொடர்ந்து வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல வக்கீல்களும் படுகாயமடைந்தனர். வக்கீல்கள் மட்டுமல்லாமல், கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள், ஐகோர்ட்டு நீதிபதிகளும் இந்த தடியடியில் இருந்து தப்பவில்லை. அவர்களும் படுகாயமடைந்தனர்.

இந்த தடியடி சம்பவத்தை கண்டித்து, ஒவ்வொரு ஆண்டும் வக்கீல்கள், பிப்ரவரி 19-ந் தேதியை கருப்புத்தினமாக கடைபிடித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு கருப்புத் தினத்தை இன்று சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் கடைபிடித்தனர். காலையில் ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் மோ கனகிருஷ்ணன் தலைமையில், துணை தலைவர் ஆர்.சுதா, செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் காமராஜ், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் நளினி, துணை தலைவர்சோபா, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, பொருளாளர் ராஜலட்சுமி, நூலகம் அறிவுக்கரசி, முன்னாள் தலைவர் பிரசன்னா, உள்பட ஏராளமான வக்கீல்கள் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ஆவின்பாலகம் முன்பு கூடினர்.

பின்னர், அங்கிருந்து ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் போலீசாரை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஐகோர்ட்டு நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையடுத்து வக்கீல்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், ‘ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் மீது தடியடி நடத்தி 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த தடியடி சம்பவத்துக்கு முக்கிய காரணமான முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் அவர்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்’ என்று கூறினார். #tamilnews
Tags:    

Similar News