செய்திகள்

மக்களின் நம்பகத்தன்மையை அ.தி.மு.க. அரசு இழந்து வருகிறது- முத்தரசன் பேச்சு

Published On 2018-02-14 12:08 GMT   |   Update On 2018-02-14 12:08 GMT
ஜெயலலிதாவால் மக்களின் பலத்தை சம்பாதித்த அ.தி.மு.க., தற்போதுள்ள இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மூலம் அந்த பலத்தை இழந்து கொண்டு வருகிறது என்று முத்தரசன் பேசியுள்ளார்.

விழுப்புரம்:

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க., மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகேவுள்ள திருவள்ளூவர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-

இந்த கூட்டம் அனைத்து மதத்தவர், ஜாதியினரை சேர்த்துள்ளது. இந்த பொங்கலுக்கு தற்போதுள்ள ஆளுங்கட்சி அரசு, மக்களுக்கு பஸ் கட்டண உயர்வை பரிசாக தந்துள்ளது. இதன் மூலம் இந்த அரசு பொதுமக்களின் நம்பிக்கை தன்மையை இழந்துள்ளது.

தனியாரிடம் சென்றால் போக்குவரத்து கழகம் சிறப்பாக இயங்கும் என்ற நிலையை எடப்பாடி அரசு தோற்றுவிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. என்னை பொறுத்தவரை, அரசே நிர்வாகத்தை சிறப்பாக இயக்கும் நிலைகள் பல உள்ளது. தனியாரிடம் சென்றால் குக்கிராமங்களுக்கு பஸ்கள் செல்லாத நிலையே ஏற்படும்.

கரும்பு விவசாயிகள் பல ஆண்டுகளாக நிலுவை தொகைக்காக போராடி வருகின்றனர். இதற்கு தீர்வு கண்டபாடில்லை. மத்தியில் உள்ள மோடி அரசு சொல்வதை தவறாமல் செய்வதே தற்போதுள்ள ஆட்சியாளர்களின் தலையாய பணியாக உள்ளது.

ஜெயலலிதாவால் மக்களின் பலத்தை சம்பாதித்த அ.தி.மு.க., தற்போதுள்ள இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மூலம் அந்த பலத்தை இழந்து கொண்டு வருகிறது. மக்களே நீங்கள் சிந்தித்து உங்களின் வாக்குகளை நம்பிக்கை உள்ளவருக்கு வாக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்திற்கு தி.மு.க., மத்திய மாவட்ட தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ராதாமணி தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார். தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான், தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அங்கையர்கண்ணி, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், மாசிலாமணி, வசந்தம் கார்த்திகேயன், சீத்தாபதி சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், வி.சி., பொது செயலாளர் துரை ரவிக்குமார், ம.தி.மு.க., துணை பொது செயலாளர் மணி, சி.பி.எம்., மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் அனிபா சிறப்புரையாற்றினர்.

தி.மு.க., மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர் ஜெயச்சந்திரன், துணை தலைவர் மைதிலி ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.புஷ்பராஜ், காங்., மத்திய மாவட்ட தலைவர் சீனுவாசக்குமார், வடக்கு தலைவர் ரமேஷ், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம்மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, ம.தி.மு.க., பாபு கோவிந்தராஜ், வி.சி., மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க., நகர அவை தலைவர் சக்கரை நன்றி கூறினார். #tamilnews

Tags:    

Similar News