செய்திகள்

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு துப்புரவு பணியாளர் சிகிச்சை அளித்ததாக பரபரப்பு

Published On 2017-11-23 14:19 GMT   |   Update On 2017-11-23 14:19 GMT
அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு துப்புரவு பணியாளர் சிகிச்சை அளித்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்:

கும்பகோணத்தை அடுத்த கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சசிகலா(வயது28). கடந்த 30-ந்தேதி சசிகலாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் . அவருக்கு டாக்டரின் ஆலோசனையின் பேரில் பணியில் இருந்த செவிலியர் டிரிப்ஸ் போட்டு மருந்து செலுத்தினர்.

பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால் கையில் டிரிப்ஸ் போட்ட இடத்தில் கடுமையான வலி ஏற்படவே அரசு மருத்துவமனைக்கு சென்று காண்பித்தபோது ஒன்றும் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது கையில் உடைந்த ஊசி துண்டு இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் எக்ஸ்ரேவுடன் மீண்டும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சென்று காண்பித்தபோது அங்கிருந்த டாக்டர்கள் கையில் ஊசி துண்டு இருப்பதை ஒப்புக் கொண்டு அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம் என்று கூறி சசிகலாவை வார்டில் அனுமதித்தனர். ஆனால் அவருக்கு வார்டில் படுக்கை வசதி செய்து தரப்படவில்லை என்றும், அறுவை சிகிச்சை செய்ய ஒருமாதமாகும் என்று டாக்டர்கள் கூறியதாக அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கூறுகையில், நான் காய்ச்சலுக்காக கடந்த மாதம் இங்கு வந்தேன். அப்போது கையில் ஊசி போட்டு மருந்து செலுத்தினர். பின்னர் நான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்முன் கையில் போட்டிருந்த ஊசியை எடுக்க அங்கிருந்த நர்சை தேடியபோது அவர் இல்லை. அப்போது அங்கு பணியில் இருந்த ஒரு துப்புரவு பணியாளர் வந்து என் கையில் இருந்த ஊசியை எடுத்தார். அப்போதே எனக்கு வலி ஏற்பட்டது. அவர் சரியாயிடும் என்று கூறி விட்டு சென்று விட்டார். ஆனால் தனியார் மருத்துவமனையில் எடுத்த எக்ஸ்ரே மூலம் எனது கையில் உடைந்த ஊசி துண்டு இருப்பது தெரியவந்தது. அதனை எடுக்க அறுவை சிகிச்சை செய்வதாக கூறி என்னை வார்டில் அனுமதித்துள்ளனர் என்று அவர் கூறினார்.
Tags:    

Similar News