உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 2 விவசாயிகள் மரணம்

Published On 2024-05-08 03:33 GMT   |   Update On 2024-05-08 03:33 GMT
  • திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.
  • பாதிக்கப்பட்ட அனைவரும் புலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும், பள்ளி நீர்ஓடையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3-ந்தேதி குள்ளஞ்சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் காலை உணவு பரிமாறப்பட்டது. திருமண விழாவுக்கு வந்த இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் உணவு சாப்பிட்டனர்.

அதேபோல் புலியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திருவேங்கடம் (வயது 65) என்பவரும் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதில் உடல் சோர்வுடன் காணப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு குள்ளஞ்சாவடி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இவரை தொடர்ந்து திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் புலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியிலும், புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருவேங்கடம் சிகிச்சை பலன் இன்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பும், புலியூர் காட்டுசாகை தெற்கு தெருவை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் விவசாயி களிகானம் என்கிற நாராயணசாமி (55) நேற்று முன்தினம் இரவும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு அந்தந்த ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News