செய்திகள்

அமைச்சர்களை தொடர்ந்து புதுவை எம்.எல்.ஏ.க்களுடன் மோதலுக்கு தயாராகும் கவர்னர் கிரண்பேடி

Published On 2017-11-11 07:28 GMT   |   Update On 2017-11-11 07:28 GMT
அமைச்சர்களை தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி தற்போது புதுவை எம்.எல்.ஏ.க்களுடன் மோதலில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சர்களுக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.

யூனியன் பிரதேசமான புதுவையில் தனக்கே அதிகாரம் உள்ளது என கூறி கவர்னர் கிரண்பேடி புதுவை அரசின் அன்றாட பணிகளில் தலையிட்டு வருகிறார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் எனக்கூறி அமைச்சர்கள், கவர்னரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மோதல் காரணமாக புதுவையிலேயே முடிவு செய்ய வேண்டிய கோப்புகளை மத்திய உள்துறைக்கு கவர்னர் அனுப்பி வருகிறார்.

காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற நாள் முதலே கடந்த 1½ ஆண்டுகளாக இந்த மோதல் நீடித்து வருகிறது. இதோடு புதுவை அரசையும், அமைச்சர்களையும் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் விமர்சித்தும் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அமைச்சர்களை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களுடன் மோதலுக்கு கவர்னர் கிரண் பேடி தயாராகி உள்ளார். புதுவை எம்.எல்.ஏ.க்களின் வாகன ஓட்டுனர்களாக அரசு சார்பு நிறுவனங்களின் ஊழியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.

இந்த நடைமுறை பல ஆண்டுகளாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்களின் வாகனங்களை ஓட்டும் இந்த டிரைவர்கள் அரசின் சார்பு நிறுவனங்களில் சம்பளம் பெற்றுக்கொள்வார்கள்.

அரசின் சார்பு நிறுவனமான சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுனர்கள் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்களை ஓட்டுவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சமூக வளைதளத்தில் கவர்னர் கிரண்பேடி கூறியிருப்பதாவது:-

புதுவை சாலை போக்குவரத்து கழகத்தில் 37 டிரைவர்கள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் வாகனங்களை ஓட்டுவதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி போக்குவரத்து துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டு இது உண்மையா? என உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு அனுமதி வழங்கியது யார்? அந்த டிரைவர்களுக்கு யாருடைய பணம் சம்பளமாக வழங்கப்படுகிறது?

எந்தெந்த டிரைவர் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டுனர்களாக பணிபுரிகின்றனர் என்பதை தெரிவிக்க வேண்டும்? இது உண்மையாக இருந்தால் அதற்கு புதுவை சாலை போக்குவரத்து கழக பொது மேலாளரும், போக்குவரத்து துறை ஆணையரும் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர்களை தொடர்ந்து கவர்னர் கிரண் பேடி தற்போது புதுவை எம்.எல்.ஏ.க்களுடன் மோதலில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News