செய்திகள்

நெல்லையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: கோர்ட்டு அருகில் உள்ள வரவேற்பு வளைவை அகற்றக்கோரி வழக்கு

Published On 2017-11-10 10:20 GMT   |   Update On 2017-11-10 10:20 GMT
நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தற்காலிக வரவேற்பு வளைவை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நாளைக்குள் கலெக்டர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த சையது அஜீஸ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பாளையங்கோட்டையில் வருகிற 12-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பெல் மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் தற்காலிக வரவேற்பு வளைவு மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

ஏற்கனவே நீதிமன்றத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எவ்வித விளம்பரப்பலகைகளோ, பதாகைகளோ ஆர்ச்சுகளோ அமைக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவு உள்ளது.

அடைமழை பெய்துவரும் நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக ஐகோர்ட்டு உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ள தற்காலிக ஆர்ச்சை அகற்ற உத்தரவிட வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர், விழா 12-ந்தேதி நடைபெற உள்ளதால் 11-ந் தேதி (நாளை)க்குள் நெல்லை கலெக்டர், மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News