செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பண்டல்களை படத்தில் காணலாம்

கோவை சரவணம்பட்டியில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

Published On 2017-09-20 08:41 GMT   |   Update On 2017-09-20 08:41 GMT
கோவை சரவணம்பட்டியில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரவணம்பட்டி:

பெங்களூரில் இருந்து கோவை சரவணம்பட்டி பகுதிக்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் கணபதி புதூர் 8-வது வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு வந்த ஒரு மினி லாரியை சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சுமார் 50 பண்டல்களில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

புகையிலை பொருட்கள் கடத்தலில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 2 பேருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குட்கா பறிமுதல் செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தில் இருந்து கோவை மாவட்டம் முழுவதும் வினியோகம் செய்யப்படுவதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே இதில் யார்- யார்? சம்பந்தப்பட்டு உள்ளார்கள் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

ரூ.12 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News