செய்திகள்
லாரிகள் மோதி நின்ற காட்சி

ஆம்பூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி

Published On 2017-07-22 05:00 GMT   |   Update On 2017-07-22 05:08 GMT
ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
ஆம்பூர்:

சென்னையில் இருந்து இரும்பு குழாய்களை ஏற்றிய கண்டெய்னர் லாரி இன்று காலை பெங்களூர் நோக்கி சென்றது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் பச்சகுப்பம் மேம்பாலத்தில் லாரி சென்றது. அங்கு ஷூ கம்பெனி வாகனம் ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அதன் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி டிரைவர் வலது பக்கம் திருப்பினார். அவரது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையின் எதிர் திசையில் பாய்ந்தது.

அப்போது சாலையின் மறுபுறம் வேலூர் நோக்கி மாட்டு தீவன மூட்டை ஏற்றிவந்த லாரி மீது கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதியது. கண்டெய்னர் லாரி மேம்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து தொங்கியபடி நின்றது.

இந்த பயங்கர விபத்தில் லாரிகளின் முன் பகுதி நொறுங்கியது. 2 லாரிகளின் டிரைவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தனர். கிளீனர்கள் 2 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர்.

இது பற்றி தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டது. உயிருக்கு போராடிய கிளீனர்கள் இருவரையும் மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவரும் இறந்தனர்.

2 லாரி டிரைவர் உடல்கள் இடிபாட்டுக்குள் சிக்கி கிடந்தன. பொதுமக்கள் உதவியுடன் போலீசார் உடல்களை மீட்க முயன்றனர். பின்னர் ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கபட்டனர்.

மாட்டு தீவன மூட்டை லாரியில் இருந்த டிரைவர் உடலை 1 மணி நேரத்துக்கு பிறகு மீட்டனர்.

கண்டெய்னர் லாரி மேம்பாலத்தில் தொங்கி கொண்டிருந்ததால் அதில் சிக்கிய டிரைவரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலியானவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மாட்டு தீவனம் ஏற்றி வந்த லாரியில் வந்தவர்கள் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த முனீர் அகமது (வயது40). பாரூக் (35).

இரும்பு பைப் லாரியில் பலியானவர்கள் திருச்சி மாவட்டம் முசிறி பாப்பம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (47) பால சுப்பிரமணி (37) என்பது தெரிய வந்தது.

தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே இரு லாரிகளும் நின்றதால் சாலையின் இருபுறமும் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்றன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து வாகனங்களை பச்சூர் மேம்பாலத்துக்கு செல்வதை தடுத்து பாலாற்றின் வழியாக திருப்பி விடப்பட்டன.

பாலாற்றின் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால் போக்குவரத்து ஓரளவு சீரானது.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில நடந்த கோர விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News