செய்திகள்

கே.வி.குப்பம் அருகே 40 நாய்கள் வி‌ஷம் வைத்து கொலை - விவசாயி மீது வழக்கு பதிவு

Published On 2017-06-21 06:29 GMT   |   Update On 2017-06-21 06:29 GMT
கே.வி.குப்பம் அருகே 40 தெரு நாய்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டன. இது தொடர்பாக விவசாயி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன் (வயது35). சென்னையில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பசுமாத்தூர் வந்தார். அப்போது அவர் வளர்த்து வந்த நாய் வீட்டின் பின்புறம் இறந்து கிடந்தது.

இதனைக் கண்டு திடுக்கிட்ட அவர் அக்கம் பக்கத்தில் விசாரித்தார். அப்போது அதே தெருவில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் வளர்த்து வந்த நாய்கள் வாயில் நுரை தள்ளியபடி அடுத்தடுத்து இறந்தது தெரியவந்தது. மேலும் பசுமாத்தூரில் உள்ள விவசாய நிலத்தில் காலி மனைகளில் 25 தெரு நாய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இறந்து சிதறி கிடந்தன.

இதுகுறித்து விசாரித்த போது அதே ஊரை சேர்ந்த விவசாயி வல்லவன் கோழி வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் இருந்த 2 கோழிகளை நாய்கள் விரட்டி கடித்ததாக கூறப்படுகிறது. இதில் 2 கோழிகளும் இறந்தன.

இதனால் ஆத்திரமடைந்த வல்லவன் இறைச்சியில் கொக்கு மருந்து தடவி நாய்கள் இருக்கும் வீடுகளின் அருகிலும், தெரு நாய்கள் சுற்றி திரியும் பகுதியிலும் வீசியதாக தெரிகிறது. வி‌ஷம் கலந்த இறைச்சியை திண்ற நாய்கள் ஒவ்வொன்றாக இறந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கதிரவன் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விலங்குகளை வி‌ஷம் வைத்து கொன்றதாக வல்லவன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

நாய்கள் கொல்லப்பட்டது குறித்து குடியாத்தம் புளுகிராஸ் அமைப்புக்கு தெரியவந்தது. புளுகிராஸ் அமைப்பினர் பசுமாத்தூர் கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் குடியாத்தம் கால்நடை மருத்துவர்கள் குழுவினர் 10 நாய்களுக்கு பிரேத பரிசோதனை செய்தனர். நாய்கள் வி‌ஷம் திண்று இறந்தது உறுதியானால் வல்லவன் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News