search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்கள்"

    • வெறி நாயை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேக்குபேட்டை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    • அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி, சேக்குபேட்டை நடுத்தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சாலியர் தெருவிற்கு செல்லும் குறுக்கு சந்து பகுதியில் வெறி நாய் ஒன்று திரிகிறது.

    இப்பகுதியில் தனியார் பட்டு ஜவுளியகம் உள்ளதால் பட்டு சேலை எடுக்க வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை, வெறி நாய் கடித்து வருகிறது.

    இதுவரை உள்ளூர் மற்றும வெளியூர்வாசிகள் என மொத்தம் 15 பேரை, இந்த வெறி நாய் கடித்துள்ளதாக இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். எனவே அச்சுறுத்தும் வெறி நாயை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேக்குபேட்டை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் வெறி நாய் ஒன்று சுற்றி வருகிறது. அதே கிராமத்தை சேர்ந்த பிரபாவதி (வயது 67) என்பவரை கடித்து உள்ளது. அதே நாளில் அடுத்தடுத்து தட்சணாமூர்த்தி, கவிதா, கோமளா உள்ளிட்ட ஏழு பேரை வெறி நாய் கடித்துள்ளது. தொடர்ந்து அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • சுகாதார அலுவலகம் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    • கால்நடை பராமரிப்பு வளாகத்தில் கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டு களில் சமீப காலமாக தெரு நாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி செல்வதும், குரைப்பதும் என அச்சுறுத்தி வருகிறது. சில நேரங்களில் திடீரென்று தெருக்களில் செல்லுகின்ற வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துகளும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் தெருநாய்கள் கடித்து பலர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்ப டுத்த வேண்டும் என்று திருவள்ளூர் நகர மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா உத்தரவின் பேரில் திருவள்ளூர் சுகாதார அலுவலகம் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    முதல் கட்டமாக நகராட்சி பகுதியில் உள்ள 11-வது வார்டில் இன்று காலை சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு வளாகத்தில் கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி திருவள்ளூர் நகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களை பிடித்து நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அவர்களை கண்டதும் தப்பி ஓட முயன்ற நாய்களை விரட்டி சென்று வலை கூண்டை வீசி பிடித்து வாகனத்தில் கொண்டு சென்றனர். தெருக்களில் சுற்றும் நாய்களை பிடிக்கும் பணி இன்னும் வரும் நாட்களிலும் தொடர்நது நடைபெறும் என்று திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தெரிவித்து உள்ளார்.

    • நகரின் முக்கிய பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

    அதிராம்பட்டினம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிராம்பட்டினம் நகர செயலாளர் பன்னீர் செல்வம் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    அதிராம்பட்டினம் நகரின் முக்கிய பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் சாலையில் செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

    மேலும், இருசக்கர வாகனங்களில் செ ல்வோரை பின் தொடர்ந்து சென்று துரத்துகிறது.

    இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நடந்து செல்பவர்களை சில நாய்கள் கடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    எனவே, நகராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • திருவிழா நடைபெற இருப்பதால் கழிவுநீரை அப்புறப்படுத்தி தண்ணீர் நிரப்ப வேண்டும்.
    • திங்கட்கிழமைக்கு மேல் ஒவ்வொரு வார்டுக்கும் 5 விளக்குகள் வழங்கப்படும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் சண்முகப்பிரியா தலைமை யில், ஆணையர் குமரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு :-

    நாடிமுத்து: எனது பட்டா மாறுதல் தொடர்பான கோரிக்கைகளை ஏற்று பட்டா மாறுதல் 150 நபருக்கு மேல் ஒரே நாளில் ஆன்லைனில் ஏற்றப்பட்டு ள்ளதற்கு நன்றி.

    ராயல்குமார் : நீண்ட கோரிக்கைக்கு பிறகு எனது வார்டில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கபட்டுள்ளது.

    ஆனால் அதற்கு ஆட்களை கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவா தியேட்டர் சிமெண்ட் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. புதிய சாலை அமைக்க வேண்டும்.

    ரவிக்குமார் : பெருமாள் கோவில்குளம் தூர்வாரி சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு தேங்கிய கழிவுநிறையால் சாக்கடை யாகி துர்நாற்றம் வீசுகிறது. திருவிழா நடைபெற இருப்பதால் அதனை அப்புறப்படுத்தி தண்ணீர் நிரப்பி பராமரிக்க வேண்டும்.

    மகாலட்சுமி : எனது வார்டில் நகராட்சி வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும். தெருவிளக்கு பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. துப்புரவு பணி மிக மோசம்.

    ஆணையர் : பட்டுக்கோட்டை நகராட்சிக்கு கழிவுநீர் எடுப்பதற்கு இரண்டு வாகனம் ஒப்புதல் அளிக்கப்ப ட்டுள்ளது. விரைவில் அதற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

    சரவணன் : எனது வார்டில் உள்ள நகராட்சிக்கு பள்ளிக்கு எதிரே உள்ள ஆற்றங்கரையில் சிறிய வகை பாலம் அமைக்க வேண்டும். குடிநீர் இணைப்பு அனுமதி பெறாமல் வைத்துள்ள வர்களின் இணைப்புகள் துண்டிக்க ப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நலத்திட்ட பணியாளர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர் என்ற வெள்ளை அறிக்கை வேண்டும்.

    சுரேஷ் : எனது வார்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சாலை வேறு பகுதியில் போடப்பட்டது ஏன்?

    பொறியாளர் நகராட்சி தீர்மானத்தில் அறிவிக்க ப்பட்டுள்ள பகுதியில் தான் சாலை போடப்பட்டுள்ளது. உங்களின் கோரிக்கை ஒரு வாரத்தில் சரி செய்யப்படும்.

    ராமலிங்கம் : மழைக்காலத்திற்கு முன்னதாக எனது வார்டில் போஸ்ட் ஆபீஸ் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும்.

    கலையரசி : நாடிஅம்மன் கோவில் சாலையில் மாடுகள், நாய்கள் தொல்லை அதிக அளவில் இருக்கிறது. நாடியம்மன் கோவில் குளத்தினில் குடியிருப்பு வாசிகள் கழிவுநீர் பைப்பு இணைத்துள்ளார்கள். அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

    சதாசிவகுமார் : ஏழை எளிய மாணவ -மாணவிகள் போட்டி தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் எனது வார்டில் ஒரு பயிற்சி மையத்தை நகராட்சி சார்பில் ஏற்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் இன்னும் சாலை வசதி இல்லா மலும், தெருவிளக்குகள் இல்லாமலும் உள்ளதை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

    ஆணையர் : ஒரு கோடியே 16 லட்சம் செலவில் ஆர்.வி நகர் பகுதியில் அறிவுசார் நிலையம் அமைக்கப்ப ட்டுள்ளது. போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் இளைஞர்களுக்கு ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மூலம் பாடம் சொல்லிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணி முடிந்து திறப்பு விழா காணப்படும்.

    பிரபாகணி : எனது வார்டில் சாலை அமைத்ததற்கு நன்றி. கழிவுநீர் வாய்க்கால் என்னவாயிற்று. தெரு விளக்கு பராமரிப்பு மிக மோசம்.

    பொறியாளர் : பழைய ஒப்பந்ததாரர் நீக்கப்பட்டு ஐந்து உள்ளூர் நபர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு ள்ளனர். அவர்களுக்கு ஒவ்வொரு பகுதியின் அடிப்படையும் புரியவில்லை. விரைவில் அதுவும் சரி செய்யப்படும்.

    புதிதாக தெரு விளக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர். எனது வார்டுக்கு எப்பொழுது எவ்வளவு விளக்கு ஒதுக்குவீர்கள்.

    பொறியாளர் : கட்டாயம் திங்கட்கிழமைக்கு மேல் ஒவ்வொரு வார்டுக்கும் 5 விளக்குகள் வழங்கப்படும்.

    நளினி : எனது வார்டில் உள்ள ரேஷன் கடைக்கு இடையூறாக வைக்கப்ப ட்டுள்ள மின்கம்பத்தை நீக்க வேண்டும்.

    முடிவில் நகரமன்ற கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஒற்றை கோரிக்கையாக தங்கள் வார்டுகளில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் முன்வைத்து பேசி கோரிக்கை மனுவினை வழங்கினர் .

    குறிப்பாக பட்டுக்கோட்டை 19-வது வார்டு, அ.தி.மு.க கூட்டணி கட்சியில் உள்ள த.மா.கா கட்சியின் நகரமன்ற உறுப்பினர் நாடிமுத்து நாய் முகமூடி அணிந்தும், நாய் படங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் மாட்டிய படியும் நகர் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பரபரப்பினை ஏற்படுத்தி னார்.

    நாடிமுத்து நகர்மன்ற கூட்டத்தில் பேசும் பொழுது , பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் குவியும் பொதுமக்கள், நாயால் கடிக்கப்பட்டு, நாயின் மீது மோதி விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.

    பட்டுக்கோட்டையில் எந்த ஒரு பகுதிக்கும் பொதுமக்கள் இயல்பாக சென்று வர முடியாத அளவிற்கு கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் திரிவதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாக கூறினார்.

    தான் நகர்மன்ற உறுப்பி னராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை கோரிக்கை வைம் இந்த நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஒருவேளை நாயை பிடிப்பதற்கு யாரேனும் தடை விதித்தால் அவர்களிடம் அனுமதி வாங்கி தெருநாய்களை பிடித்துக் கொண்டு அவர்கள் இல்லத்தில் விட்டு பராமரிக்க சொல்வதற்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்று கொள்வதாகவும் கூறினார் .

    • பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றித்திரிந்தது.
    • கருத்தடை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றித்திரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, விலங்குகள் நல தொண்டு நிறுவன செயலாளர் அன்பழகன், பாபநாசம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் பணியாளர்கள் உதவியுடன் தெருக்களில் சுற்றித்திரிந்த 37 நாய்கள் பிடிக்கப்பட்டது. பின், அவற்றை கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான கருத்தடை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் செய்திருந்தார்.

    • பல்வேறு பகுதிகளிலும் நாய்களை பிடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
    • 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகள் மற்றும் கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கடந்த சில நாட்களாக நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் உறுதி அளித்தார். அதன்பேரில் மாநகராட்சி பகுதிகளில் நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது.

    இன்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் 10 நாய்கள் அந்தப் பகுதியில் பிடிபட்டன. அவற்றை வேனில் ஏற்றி கருத்தடை செய்ய கொண்டு சென்றனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் நாய்களை பிடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    நாகர்கோவில் கணேசபுரத்தில் பூங்காவுடன் கூடிய போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு கோட்டார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீப காலங்களில் பூங்காவில் சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகளும், நாய்களும் திரிந்து வருகின்றன. வழியை மறித்து படுத்திருக்கும் மாடுகள் எழுந்திருக்க மறுப்பதால், பூங்காவுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடி விளையாடும் சிறுவர்-சிறுமிகளை நாய்கள் விரட்டுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையை மாற்ற மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • 45 வகையான 425 நாய்கள் கலந்து கொண்டன.

    சேலம்:

    அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.

    இந்த கண்காட்சியில் பூனா, கோலாப்பூர், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், போபால், கொல்கத்தா, மற்றும் பல மாநிலங்களில் இருந்து பொமோரியன், டேஸ் ஹவுண்ட், பீகிள், ராடுவில்லர், டால்மேசன், கேன் கார்சோ, செயின்ட், கிரேடன், ராஜபாளையம், புல்டாக், சலூகி, பூடுல், ஐரிஸ்டிடம் உள்பட 45 வகையான 425 நாய்கள் கலந்து கொண்டன.

    வெற்றி பெற்ற நாய்களுக்கு பழக்கம் வழங்கப்பட்டது. நடுவர்களாக டாசன், ஆண்டோனியா, ரஞ்சித், முன்ஜால் செயல்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைவர் விசு காளியப்பன் செயலாளர் சாந்தமூர்த்தி பொருளாளர் சீனிவாசன் துணைத் தலைவர்கள் நடராஜ், பிரகாஷ், இணைச் செயலாளர் மோகன்ராஜ், அண்ணாதுரை மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • ஊட்டியில் சுற்றி திரிந்த 16 நாய்கள் வலை வீசி பிடிக்கப்பட்டன.
    • நாய்கள் பிடிக்கப்பட்டது பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி,

    ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக புகார்கள் வந்தன. இதன்அடிப்படையில் நகராட்சி கமிஷனர் ஏகராஜ் உத்தரவின்படி, சுகாதார அலுவலவர் ஸ்ரீதர் அறிவுரைப்படி நகராட்சிஅலுவலர்கள் களமிறங்கினர். அப்போது ஊட்டியில் சுற்றி திரிந்த 16 நாய்கள் வலை வீசி பிடிக்கப்பட்டன. இது பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.   

    • வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களை நாய்கள் கூட்டமாக துரத்தி கடிக்கின்றன.
    • கடந்த ஒருவாரத்தில் திருத்தணியில் 10-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்து உள்ளன.

    திருத்தணி:

    திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருகின்றன.

    நாய்கள் சாலை நடுவிலேயே படுத்து தூங்குவதாலும், அவ்வப்போது வாகனங்கள் செல்லும்போது ரோட்டின் குறுக்கே ஓடுவதாலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    மேலும் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களை நாய்கள் கூட்டமாக துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்களும், சிறுவர்களும் தெருக்களிலும், சாலையிலும் செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது.

    நேற்று மட்டும் மேட்டு தெரு மற்றும் பழைய தர்மராஜா கோவில் தெருவில் 2 ஆண்களை நாய்கள் விரட்டி, விரட்டி கடித்து குதறின. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர்.

    கடந்த ஒருவாரத்தில் திருத்தணியில் 10-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்து உள்ளன. நாய்களின் அச்சுறுத்தலால் வெளியே செல்ல பொது மக்கள் தவித்து வருகிறார்கள். தங்களது குழந்தைகளையும் வெளியே அனுப்ப பயந்தபடி உள்ளனர்.

    எனவே திருத்தணி நகராட்சியில் சுற்றிதிரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன.
    • ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர், வ.உ.சி நகர், கரைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன. மர்மமான முறையில் தெரு நாய்கள் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அக்கம் - பக்கம் வீதிகளில் விசாரித்த போது அந்தப் பகுதிகளிலும் இதே போல தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- எங்களது பகுதியில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரியும், வீடுகள் தோறும் அவைகளுக்கு உணவு வைப்பார்கள். அதனை உண்டு விட்டு தெருக்களில் சுற்றித் திரியும். இரவில் அங்குள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பாக இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் அந்த நாய்கள் இறந்து கிடந்தன. தற்போது எங்கள் பகுதியில் ஒரு தெரு நாய் கூட இல்லை. இருந்த அனைத்து நாய்களுமே மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டன என்று தெரிவித்தார்.

    மற்றொருவர் கூறுகையில், எங்கள் வீட்டில் 2 நாய்கள் வளர்த்து வந்தோம். மாலை நேரங்களில் தெரு நாய்களுடன் சேர்ந்து விளையாடிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து விடும். இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த நாய் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதையடுத்து அதனை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். அங்கு அது இறந்து விட்டது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கொடிய விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளது. அதனால் தான் உடனே இறந்து விட்டது என்று தெரிவித்தனர். நான் அதனை எங்கள் வீட்டுக்கு அருகே அடக்கம் செய்துவிட்டு வந்தபோது எங்கள் பகுதியில் இருந்த சுமார் 15க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போய் விட்டதாக அக்கம் - பக்கம் உள்ளவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே நாய்கள் இறப்பு குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கொடிய விஷம் வைத்து நாய்களைக் கொன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து பராமரித்து வளர்த்து பொதுமக்களுக்கு தி சேய்ஸ் அமைப்பினர் தத்து கொடுக்கிறார்கள்.
    • பெசன்ட் நகரில் நேற்று நடந்த முகாமில் சுமார் 500 நாய்கள் தத்து கொடுத்துள்ளோம்.

    சென்னை மற்றும் தமிழகத்தில் கேட்பாரின்றி, தெருக்களிலும், சாலைகளிலும் செல்ல பிராணிகளான நாய்கள், பூனைகள் சுற்றித்திரிகின்றன. அவைகள் பசி பட்டினியுடன், பரிதாபத்துடன் அலைந்து திரிகின்றன.

    இதையொட்டி தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து பராமரித்து வளர்த்து பொதுமக்களுக்கு தி சேய்ஸ் அமைப்பினர் தத்து கொடுக்கிறார்கள்.

    நாய்கள் மட்டுமல்ல பூனைகளும் வளர்க்கப்படுகின்றன. இந்த செல்லப் பிராணிகளை ஏராளமான பொதுமக்கள் தத்து எடுத்து செல்கின்றனர். இது குறித்து அமைப்பின் நிறுவனர் ஜெய சூர்யா கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் எங்களின் அமைப்பு உள்ளது. சென்னையில் மிகவும் சிறப்பாக நாய்களை பராமரித்து வழங்குகிறோம்.

    தெரு நாய்களை பிடித்து வந்து அவற்றை நன்றாக பராமரித்து தத்து கொடுத்து வருகிறோம்.

    பெசன்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 100 நாய்களை தத்து கொடுத்துள்ளோம். இந்த முறை 500 நாய்களை தத்து கொடுத்துள்ளோம். தத்து கொடுத்ததுடன் விடாமல் அவை சரியாக பராமரிக்கப் படுகிறதா? என்று நேரில் சென்று விசாரிப்போம்.

    சரியாக பராமரிக்கப்படாத நாய்களை திருப்பி எடுத்து வந்து விடுவோம். பெசன்ட் நகரில் நேற்று நடந்த முகாமில் சுமார் 500 நாய்கள் தத்து கொடுத்துள்ளோம்.

    துப்புரவு பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை போலீசார், பொதுமக்கள் என அனைவரும் குழந்தைகளை போல தத்து எடுத்து சென்றனர் என்றார்.

    • கூட்டத்தில் பல்வேறு செலவினங்கள் குறித்த 24 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.
    • வேட்டையாடி பழகிய நாய்கள் ஒன்றிணைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுகிறது.

    உடுமலை:

    உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முகவடிவேல், ஒன்றியக்குழு ஆணையர் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பல்வேறு செலவினங்கள் குறித்த 24 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.

    கூட்டத்தில் பெரியகோட்டை, தாந்தோணி, சின்னவீரம்பட்டி கிராமங்களில் கால்நடைகள் வேட்டையாடுவதை தடுப்பதற்காக ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாய்கள் பிடிக்கப்பட வேண்டும் என்று கால்நடை துறையினர் தெரிவித்தனர்.

    அதற்கு பிரதிநிதிகள் தரப்பில் வேட்டைக்கு செல்லும் நாய்களை வேட்டை முடிந்த பிறகு உரிமையாளர்கள் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இதனால் வேட்டையாடி பழகிய நாய்கள் ஒன்றிணைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுகிறது.அதை வனத்துறையினர் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

    ×