search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தெருவில் வீசப்பட்ட சிசுவை கடித்துக்குதறிய நாய்கள்- உடலை கைப்பற்றி டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பிய போலீசார்
    X

    தெருவில் வீசப்பட்ட சிசுவை கடித்துக்குதறிய நாய்கள்- உடலை கைப்பற்றி டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பிய போலீசார்

    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் பிறந்த சிசு ஒன்று தெருவோரம் வீசப்பட்டு போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
    • தமிழகத்தில் பெண் சிசு கொலை நடக்கும் மாவட்டங்களில் ஒன்றாக தேனி மாவட்டம் இருந்து வந்தது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள தங்கம்மாள்புரம் ஓடைத்தெருவில் ஈஸ்வரி என்பவரின் வீட்டுக்கு அருகே பிறந்து ஓரிரு நாட்களே ஆன ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது. அந்த உடலை தெருநாய்கள் கடித்துக் குதறிக்கொண்டு இருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து நாய்களை விரட்டி விட்டு கிராம நிர்வாக அலுவலர் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தையின் தலை மற்றும் கால்களை தவிர்த்து மற்ற உடல் பாகங்களை முற்றிலும் கடித்துக்குதறிய பாகங்களை பார்த்து அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர்.

    ஆண்டிபட்டி அருகே உள்ள பாலூத்து கிராமத்தில் கடந்த மாதம் பிறந்த பெண் சிசுவை அவரது பாட்டி வீட்டுக்கு அருகிலேயே புதைத்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் பிறந்த சிசு ஒன்று தெருவோரம் வீசப்பட்டு போலீசாரால் கைப்பற்றப்பட்டது. தற்போது 3-வது சம்பவமாக பிறந்த குழந்தையை மர்ம நபர் வீசிச் சென்ற நிலையில் தெருநாய்கள் கடித்து குதறி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் பெண் சிசு கொலை நடக்கும் மாவட்டங்களில் ஒன்றாக தேனி மாவட்டம் இருந்து வந்தது. அது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் தகாத முறையில் பிறக்கும் குழந்தையை கூட பராமரிக்க அரசு தொட்டில் உள்ளது என்ற விழிப்புணர்வை கிராமப்புற மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×