செய்திகள்

ஜி.எஸ்.டி. மசோதாவால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை: நிர்மலா சீதாராமன் பேட்டி

Published On 2017-06-11 16:19 GMT   |   Update On 2017-06-11 16:19 GMT
ஜி.எஸ்.டி. மசோதாவால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இது தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

திருச்சி:

பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் திருச்சி தென்னூரில் இன்று விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா தொழில் வளர்ச்சியில் சிறப்பாக உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் வெளிநாடு மூலதனம் சிறப்பாக பெறப்பட்டு இந்தியாவில் தொழில் உற்பத்தி அதிகரித்துள்ளது. உலகளாவிய ஏற்றுமதியில் சில சங்கடங்கள் இருந்தாலும் சிறப்பாக தொழில் துறையில் வளர்ச்சி பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்க முயற்சிக்கவில்லை. சிரமப்படும் சில பொதுத்துறை நிறுவனங்களின் சிரமத்தை குறைக்க மத்திய அரசு தன் பங்கை குறைத்து, அதை சிறப்பாக வழிநடத்த வேறு யார் சேருகிறார்கள் என்பதை பார்த்து அதை வளர்ச்சி பெற செய்வதற்கான நடவடிக்கைகளை செய்கிறது. இதனை தனியார்மயமாக்கும் முயற்சி என்று கூறுவது சரியல்ல.

ஏனென்றால் திருச்சியிலேயே பெல் நிறுவனத்தை சுற்றியுள்ள சிறு, சிறு நிறுவனத்தார் வளர்ச்சிக்காக பா.ஜனதா எடுத்த முயற்சி மிகப்பெரிய முயற்சியாகும். காவிரியில் தொடர்ந்து 6-வது வருடமாக கர்நாடகா தண்ணீர் திறந்து விடாத நிலையில் திருச்சியில் பா. ஜனதா விவசாயிகள் மாநில மாநாட்டை நடத்துவது சரியா? என்று கேட்பது தவறு. காவிரி பிரச்சினையை பொறுத்தவரை இரு மாநிலங்களுக்கு இடையேயான வி‌ஷயம். இதில் பா.ஜனதா மீது தவறு இல்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாராளு மன்றத்தை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கோர்ட்டில் பதில் அளித்துள்ளது. ஒற்றை தீர்ப்பாயத்தை கொண்டு வருவது காவிரி மேலாண்மை வாரியத்தை தடுக்கும் முயற்சி என்பதும் தவறு.

மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்தை பினாமி ஆட்சி செய்கிறது என்று கூறுவதும் சரியல்ல. பிரதமரை தமிழக முதல்வர் சந்திப்பதை வைத்து இதுபோன்று கூறக்கூடாது. பிரதமரை யார் வேண்டு மானாலும் சந்திக்கலாம். விவசாயிகளை மத்திய உள்துறை அமைச்சர் , நிதி அமைச்சர், நீர் ஆதாரத்துறை அமைச்சர் என்று பலரும் சந்தித்து பேசியுள்ளனர்.

ஆனால் அது பற்றி யாரும் கூறாமல் பிரதமர் சந்திக்க வில்லையே என்று கூறி வருகின்றனர். இதுபற்றி விவசாயிகளுக்கு பதில் அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

ஜி.எஸ்.டி. மசோதாவால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இது தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது.காங்கிரஸ் ஆட்சியில்தான் ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டது. அப்போது நாங்கள் அதனை ஏற்கவில்லை. தற்போது யாரும் பாதிக்காத வகையில் மசோதாவில் மாற்றம் செய்து, மாநிலங்களுக்கு வருமானம் பாதிக்காத வகையில் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வானதி சீனி வாசன், திருச்சி மாவட்ட தலைவர் தங்க.ராஜய்யன் மற்றும் பலர் இருந்தனர்.

Tags:    

Similar News