செய்திகள்

கிரிக்கெட் விளையாடிய போது மின்னல் தாக்கி 2 பேர் பலி

Published On 2017-05-27 08:31 GMT   |   Update On 2017-05-27 08:31 GMT
கிரிக்கெட் விளையாடிய போது மின்னல் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் களத்தூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னர், சில நிமிடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 45 நிமிடம் வரை நீடித்தது.

உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). இவரும், அதேஊரை சேர்ந்த திருஞானவேல் (14), தரணிதரன் (14), துதிர்வியாழன் (12), சுரேஷ் (32) ஆகியோரும் அங்குள்ள திறந்தவெளி பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். மாலை 5.30 மணியளவில் அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

அப்போது மின்னல் தாக்கியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியானார். இதில் திருஞானவேல் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி திருஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷ் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மின்னல் தாக்கி பலியான மணிகண்டன் கடந்த 21-ந்தேதி நடந்த 2-ம் நிலை காவலர் எழுத்துத்தேர்வை எழுதியிருந்தார். திருஞானவேல் சேந்தநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, கோடை விடுமுறையில் வீட்டில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மின்னல் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் களத்தூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News