தமிழ்நாடு

கேரள அரசை கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் மே 27-ல் போராட்டம்

Published On 2024-05-25 03:51 GMT   |   Update On 2024-05-25 03:51 GMT
  • அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது.
  • போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.

கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை 999 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் தமிழக நீர் வளத்துறை பராமரிப்பில் உள்ளது.

பூகோள அடிப்படையில் கேரளாவில் இருந்தாலும் அணை பராமரிப்பு முழுவதும் தமிழக அரசே மேற்கொண்டு வருகிறது.

அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் அணையை உறுதி செய்யும் தன்மையை உச்சநீதிமன்றமே வல்லுனர் குழுவை 11 முறை அனுப்பி உறுதி செய்தது. அணையின் கீழ் பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்தி முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கிக் கொள்ள உத்தரவிட்டது. அதன்படி 10.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையில் 7.86 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தற்போது வரை தேக்கப்படுகிறது. அணையில் முழு கொள்ளளவு நீரை சேமிக்க முடியாததால் 5 மாவட்டங்களின் பாசன பரப்பை அதிகரிக்க முடியாமலும், குடிநீர் வழங்கும் பணியை விரிவாக்கம் செய்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

இது தவிர அணையை பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள கேரள வனத்துறை பல ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த சூழலில்தான் புதிய அணை கட்ட வேண்டும் எனவும், தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணை பலமிழந்து விட்டதால் இடிந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழுவதும் சேதமாகும் என்றும், வீண் வதந்தி பரப்பி வருகிறது.

இந்நிலையில் முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. அதில் முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகி விட்டதால் அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தற்போதுள்ள அணைக்கு 1200 அடி கீழே புதிய அணையை கட்டிய பின்பு பழைய அணையை இடிக்க அனுமதிக்க வேண்டும். புதிய அணை கட்டும் போதும், கட்டி முடிக்கப்பட்ட பின்பும் தமிழகத்துக்கான நீர் பகிர்வு தற்போதைய நிலையிலேயே தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஆய்வு செய்த அமைச்சகம் அதனை நிபுணர் மதிப்பீட்டுக்குழுவுக்கு கடந்த 14-ந் தேதி அனுப்பியது.

மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு வருகிற 28-ந் தேதிக்கு இது தொடர்பான கூட்டத்தை நடத்த உள்ளது. கேரளாவின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கேரள அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை வைத்து கேரளாவில் எந்த அரசு வந்தாலும் அரசியல் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது. அணையை எப்படியாவது இடித்து விட்டு அந்த அணை தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் நிலைப்பாடாக உள்ளது. உச்சநீதிமன்றம் தலைசிறந்த வல்லுனர் குழுவை அமைத்து அணை பலமாக இருப்பதாகவும் பூகம்பம் ஏற்பட்டால் கூட எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி செய்த பின்பே 142 அடி வரை தண்ணீர் தேக்க உத்தரவிட்டது.

அதனையும் மீறி கேரள அரசு புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருப்பது 152 அடி வரை உயர்த்த முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பணிய வைத்து முல்லைப்பெரியாறு அணையை அழித்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டும் கேரளாவின் கனவு ஒருபோதும் பலிக்காது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் மென்மையான போக்கை கைவிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி காலை 10 மணியளவில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.

பென்னி குவிக் நினைவிடத்தில் இருந்து திரண்டு பேரணியாக சென்று கேரள மாநில எல்லையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News