பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க.- காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது
- தி.மு.க. தரப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட 25 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தி.மு.க. வட்டாரங்களில் அறியப்படுகிறது.
- தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளும் தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
இதில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகிய 4 பேர் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர்.
தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே உடல்நலக் குறைவால் பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு. அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை காங்கிரஸ் முன்னிறுத்தி வரும் நிலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் பேச இருக்கும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குறைந்தபட்சம் 35 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்பார் என்று கூறப்படுகிறது.
தி.மு.க. தரப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட 25 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தி.மு.க. வட்டாரங்களில் அறியப்படுகிறது. எனவே, இந்த பேச்சுவார்த்தை இன்றுடன் எளிதாக முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.