உள்ளூர் செய்திகள்

கோடை மழை- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம் 'கிடுகிடு' உயர்வு

Published On 2024-05-25 03:58 GMT   |   Update On 2024-05-25 03:58 GMT
  • நம்பியாற்றில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. முன்கார் பருவ சாகுபடி பணிகளும் தொடங்கி உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

குறிப்பாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 5 அடி அதிகரித்து 57.30 அடியாக இருந்த நிலையில், இன்று சுமார் 5 சென்டிமீட்டர் மழை பெய்ததால் அணை நீர்மட்டம் மேலும் 7 அடி உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.30 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழையால் நேற்று 72.34 அடியாக இருந்த அந்த அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் சுமார் 13 அடி உயர்ந்துள்ளது.

இதன் மூலம் அந்த அணை 85.46 அடியை எட்டியுள்ளது. அங்கு 26 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த 2 அணைகளுக்கும் நேற்று 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று வினாடிக்கு 4,372 கனஅடி நீர் வருகிறது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ½ அடி உயர்ந்து 85.52 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 802 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைப்பகுதியில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நம்பியாற்றில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 1 1/2 அடி உயர்ந்து 14 அடியை எட்டியுள்ளது.

இதேபோல் கொடுமுடியாறு அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் 52.50 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 16 அடி உயர்ந்து 31 அடியாக உள்ளது. நேற்று அந்த அணையில் 15.25 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது.

தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 நாட்களாக ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலைப்பகுதியில் தொடர்மழையால் களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் பணகுடி குத்திரபாஞ்சான் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. பெரும்பாலான காட்டுப்பகுதி ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாஞ்சோலை வனப்பகுதியிலும் கனமழை பொழிந்து வருகிறது.

மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் பகுதி, சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்தது. பணகுடி மற்றும் திசையன்விளை பகுதிகளில் பலத்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. ராதாபுரத்தில் நெடுஞ்சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தென்காசி நகர் பகுதி, செங்கோட்டை, புளியரை, ஆய்க்குடி, அச்சன்புதூர், மேக்கரை, இலஞ்சி, வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

சங்கரன்கோவில், திருவேங்கடம், வாசுதேவநல்லூர், புளியங்குடி, சிவகரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அதிகபட்சமாக சிவகிரியில் 34 மில்லிமீட்டர் மழை பெய்தது.

அங்கு தலையணை, தேவிபட்டினம், விஸ்வநாதபேரி, கோம்பையாறு, வடுகப்பட்டி, தென்மலை, ராயகிரி பகுதிகளில் சாரல் மழை நேற்று மாலையில் தொடங்கிய நிலையில், இரவில் இடி-மின்னலுடன் கனமழையாக பெய்தது. இன்றும் காலை 6 மணி முதல் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. தென்காசி நகர் பகுதியில் 27.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

அணைகளை பொறுத்த வரை கருப்பாநதி, குண்டாறு, கடனா அணை, ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடனா அணை நீர்மட்டம் 1 அடி அதிகரித்து 36 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் மேலும் 6 அடி அதிகரித்து 52 அடியாகவும், கருப்பா நதி நீர்மட்டம் 2 அடியும் அதிகரித்துள்ளது. அடவி நயினார் அணை நீர்மட்டம் 4 1/2 அடி அதிகரித்து 55 அடியை எட்டியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கயத்தாறு, கடம்பூர், ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கழுகுமலை மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக பெய்துவரும் மழையால் மானாவாரி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சாத்தான்குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கோடை மழை தொடர்ந்து பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News