நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
- முதலமைச்சர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
- மாலை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
நெல்லை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம்தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோதங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு நெல்லை சென்ற அவருக்கு மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி. நகரில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிரகாம்பெல் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை சென்றார். நெல்லையில் சாலையின் இருபுறமும் திரண்ட தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாலை 4 மணிக்கு புறப்பட்டு வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து இரவில் ரெட்டியார்பட்டி யில் ரூ.56 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை மின்னும் விளக்கொளியில் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவில் பங்கேற்கிறார்.
அங்கிருந்தபடி ரூ.72.10 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.5.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், பாளையங்கோட்டையில் ரூ.3½ கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம், பாளையங்கோட்டையில் ரூ.1.69 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவு பகுப்பாய்வு ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும் மேலப்பாளையம் மீரா பள்ளிவாசலில் ரூ.1.70 கோடியில் சமுதாய கூடம் உள்பட ரூ.182.74 கோடியில் முடிவுற்ற 32 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.98 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள அறிவுசார் நூலக கட்டிடம் உள்பட ரூ.357 கோடியில் 11 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
50 புதிய பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து 45 ஆயிரத்து 112 பயனாளிகளுக்கு ரூ.101.48 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறாக நெல்லை மாவட்டத்திற்கு மொத்தம் ரூ.696 கோடியில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவுக்காக சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.