தமிழ்நாடு செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் - உதயநிதி ஸ்டாலின்

Published On 2025-12-20 14:52 IST   |   Update On 2025-12-20 14:52:00 IST
  • வருகிற 24-ந்தேதி நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது.
  • கருணாநிதியின் பேச்சு, நாகூர் ஹனீபாவின் பாட்டு ஆகிய 2 பேரின் குரல்கள் தான் திராவிட இயக்கத்தை வளர்த்தது.

நாகப்பட்டினம்:

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவாரூர் வந்தார்.

அங்கு மாலை 6 மணிக்கு காட்டூர் கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மறைந்த தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திருவிடம் படத்திறப்பு நிகழ்ச்சி கலைஞர் கோட்டம், அஞ்சுகம் அம்மையார் திருமண அரங்கில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருவிடம் உருவப்படத்தை திறந்து வைத்தார். பின்னர் இரவு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

அதைத்தொடர்ந்து இன்று காலை (சனிக்கிழமை) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளாங்கண்ணியில் நடைபயிற்சி சென்றார். பின்னர் நாகை துறைமுகத்துக்கு சென்று அங்கு பாய்மர கப்பல் விளையாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அவர் நாகூர் சில்லடி கடற்கரையில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள நாகூர் ஹனீபா நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு நூற்றாண்டு மலரை வெளியிட்டு அவரது குடும்பத்தினரை கவுரவித்தார்.

பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

எத்தனையோ மாவட்டங்களுக்கு சென்றாலும் நாகை இங்கு வருவது எனது சொந்த ஊருக்கு வருவது போன்று நெகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலவர் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆலயம் என மும்மத வழிபாட்டு தலங்களும் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து வருகிற 24-ந்தேதி நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

நாகூர் ஹனீபா, அண்ணா, கருணாநிதி ஆகியோரிடம் நன்மதிப்பை பெற்றவர். கருணாநிதியின் பேச்சு, நாகூர் ஹனீபாவின் பாட்டு ஆகிய 2 பேரின் குரல்கள் தான் திராவிட இயக்கத்தை வளர்த்தது. ஒரே இயக்கம், ஒரே தலைவர், ஒரே இறைவன் என வாழ்ந்தவர் நாகூர் ஹனீபா. இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தி.மு.க. அரசு ஆட்சியில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. வைக்கம் நூற்றாண்டு விழா, நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா என பல்வேறு நூற்றாண்டு விழாக்களை தி.மு.க. அரசு கொண்டாடி உள்ளது.

இந்தி திணிப்பை எதிர்த்து பெரியார் அறிவித்த பேராட்டம் தான் கருணாநிதியையும், நாகூர் ஹனீபாவையும் போராட்ட களத்துக்கு கொண்டு வந்தது. இந்தி திணிப்பை எதிர்த்து அன்று போராடினோம். அதேபோல் தற்போது வேறு வழியில் மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதனை தமிழக முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் என உறுதியாக கூறுகிறார். மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விநிதி என்கிறது மத்திய அரசு. இப்படி பல்வேறு வழிகளில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. இந்தி திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது.

தனது குரல் வளத்தால் இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியவர் நாகூர் ஹனீபா. நாகூர் தைக்கால் தெருவிற்கு முதலமைச்சர் நாகூர் ஹனீபா தெரு என பெயரிட்டார். நாகூர் ஹனீபா மறைந்தபோது கலைஞர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் நாட்டை மதநல்லிணக்கம் மிகுந்த மாநிலமாக வைத்திருக்க வேண்டும். தி.மு.க. அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளது. நாகூர் ஹனீபாவின் பாடல்களை மதுரை ஆதீனம் சிறப்பாக பாடி காட்டுவார். தமிழகம் என்றென்றும் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News