தமிழில் பேச முடிந்தவரை முயற்சி செய்கிறேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி
- தமிழ் மொழி கற்பதற்கு கடினம் தான். நான் தமிழ் கற்க தொடங்கியபோது முதலில் எழுத்துகளை கற்றேன்.
- தமிழ்நாட்டு உணவு வகைகளை ரசித்து உண்ணுங்கள். கொஞ்சம் காரமாக இருக்கும்.
சென்னை:
சென்னை கிண்டி ஐ.ஐ.டி. வளாக அரங்கில் "தமிழ் கற்கலாம்" என்ற தலைப்பில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 300 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி பட்டறை தொடக்க விழா இன்று நடைபெற்றது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் டிப்ளமோ பயிற்சி தொடங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகும் நிலையில் பலரும் அதை பயன்படுத்திக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.
பூ, மரம் என இருப்பது போல் ஒன்றுக்கொன்று தொடர்புடையது போல நாம் அனைவரும் ஒன்று தான். யாரும் தனிப்பட்டவர்கள் கிடையாது.
நீர், மரம், பூமி என அனைத்தையும் வணங்க வேண்டும் என ரிஷிகள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் நம் ஒற்றுமையை பறித்து விட்டார்கள். உடலில் கை, கால் என அனைத்தும் ஒன்றாக இருப்பது போல் நாம் அனைவரும் ஒன்றானவர்கள்.
வடமாநிலத்தவர்கள் தென் மாநிலத்தவர்கள் பற்றி குறைவாகத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
காசி தமிழ் சங்கமம் தொடர்பாக தெரிந்து கொள்வதற்கு நிகழ்ச்சிகளை ஆளுநர் மாளிகையில் நடத்தினோம். அது போல் இதுவும் ஒரு புது முன்னெடுப்பு தான்.
தமிழ் மொழி கற்பதற்கு கடினம் தான். நான் தமிழ் கற்க தொடங்கியபோது முதலில் எழுத்துகளை கற்றேன். தொடர்ந்து தமிழில் பேசுவதை கேட்டேன், செய்தித்தாள்கள் படித்தேன், இப்போது முடிந்தவரை தமிழில் பேச முயல்கிறேன். நீங்களும் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் இப்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதன் மூலம் கற்றுக்கொள்வது சுலபமாகி விட்டது.
மொழியால் நமக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டு உணவு வகைகளை ரசித்து உண்ணுங்கள். கொஞ்சம் காரமாக இருக்கும். ஆனால் சுவையாக இருக்கும். கலாச்சாரங்களை வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பயிற்சிக்கு பின் நீங்கள் தொடர்ந்து தமிழ் படிக்க வேண்டும் என்று நினைத்தால் சொல்லுங்கள் எந்த கல்லூரியில் வேண்டுமோ படிக்க வைக்க உதவுகிறேன். இந்தியாவில் பல மொழிகள் உள்ளன அவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.