புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் குடிபோதையில் ரகளை செய்த சுற்றுலா பயணிகளை விரட்டியடித்த போலீசார்

Published On 2024-05-25 03:59 GMT   |   Update On 2024-05-25 03:59 GMT
  • மதுபோதையில் அவர்கள் போடும் ஆட்டத்துக்கு அளவில்லாமல் போவதால் கடற்கரைக்கு வருபவர்கள் நிம்மதியை இழக்கின்றனர்.
  • நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்தவர்களை மடக்கி எச்சரிக்கை செய்தனர். சிலருக்கு அபராதமும் விதித்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரிக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அவர்களில் பலர் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக புதுவை பழைய துறைமுக பகுதியில் இடிந்த நிலையில் உள்ள ஆபத்தான பாலத்தின் தூண்களில் அமர்ந்து மது குடிப்பது, கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள பாறாங்கற்களில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை பாறைகளில் வீசி உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் மதுபாட்டில்களின் கண்ணாடி சிதறல்கள் கடற்கரைக்கு வருபவர்களின் பாதங்களை பதம் பார்க்கின்றன. மேலும் கும்பலாக வரும் இளைஞர்கள் குடித்து விட்டு ரகளையிலும் ஈடுபடுகின்றனர். இதனால் கடற்கரைக்கு குடும்பத்தோடு வருபவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். வயதுக்கு வந்த பெண்களோடு வரும் பெற்றோர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். மதுபோதையில் அவர்கள் போடும் ஆட்டத்துக்கு அளவில்லாமல் போவதால் கடற்கரைக்கு வருபவர்கள் நிம்மதியை இழக்கின்றனர்.

இந்த நிலையில் போலீசார் பழைய துறைமுக பகுதியில் அதிரடி ஆய்வினை மேற்கொண்டனர். அங்கு குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளையும் மதுபாட்டில்களை பாறையில் வீசி உடைத்து ரகளையில் ஈடுபட்டவர்களையும் விரட்டியடித்தனர். பின்னர் எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியேற்றினர்.

மேலும் நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்தவர்களை மடக்கி எச்சரிக்கை செய்தனர். சிலருக்கு அபராதமும் விதித்தனர்.

Tags:    

Similar News