புதுச்சேரி

போலி ஆவணம் மூலம் மகன், மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட்டு பெற முயன்ற முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில்

Published On 2026-03-07 15:45 IST   |   Update On 2026-03-07 15:45:00 IST
  • இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
  • இந்த வழக்கில் தொடர்புடைய ராமலிங்கம், கல்யாண சுந்தரம், துரை பஞ்சாட்சரம் ஆகியோர் உயிரிழந்ததால் அவர்கள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் சென்டாக் மூலம் மருத்துவம், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவபூஷணம் (வயது61) என்பவர் தனது மகன், மகளுக்கு புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். சீட் பெற 2004-05-ம் கல்வியாண்டில் விண்ணப்பித்தார். இதற்காக அவர் குடியிருப்பு, சாதி சான்றிதழ்களை போலியாக தயாரித்து சமர்ப்பித்தார்.

இதனை கண்டறிந்த அப்போதைய சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ஓய்.எல்.என். ரெட்டி உருளையன் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சிவபூஷணம், அவரது மகன், மகள் மற்றும் உடந்தையாக இருந்த சிவ பூஷணத்தின் நண்பர்களான காரைக்காலை சேர்ந்த ராமலிங்கம் கல்யாண சுந்தரம், துரைபஞ்சாட்சரம் ஆகிய 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி யஸ்வந்த்ராவ் இங்கர்சல் முன்னிலையில் நடந்து வந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ராமலிங்கம், கல்யாண சுந்தரம், துரை பஞ்சாட்சரம் ஆகியோர் உயிரிழந்ததால் அவர்கள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிவபூஷணம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் இந்த வழக்கில் இருந்து சிவபூஷணத்தின் மகன், மகள் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News